பர்கூர் அருகே நடக்க முடியாமல் கீழே விழுந்த காட்டெருமை சிகிச்சை பலனின்றி சாவு
பர்கூர் அருகே நடக்க முடியாமல் கீழே விழுந்த காட்டெருமை சிகிச்சை பலனின்றி இறந்தது.
அந்தியூர்,
அந்தியூரை அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் ஊசிமலை கிராமம் உள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்த கிராமத்துக்குள் அடிக்கடி யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் புகுந்து விடுகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு காட்டெருமை ஊசிமலை கிராமத்துக்குள் நுழைந்தது. அப்போது அது நடக்க முடியாமல் ரோட்டு ஓரத்தில் தவறி விழுந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் பர்கூர் வனச்சரகர் மணிகண்டன், பர்கூர் கால்நடை டாக்டர் சுரேசுடன் சம்பவ இடத்துக்கு சென்றார்.
அதன்பின்னர் டாக்டர் சுரேஷ் காட்டெருமைக்கு குளுக்கேஸ் ஏற்றினார். மேலும், ‘20 வயதுடைய அந்த காட்டெருமை வயது முதிர்வால் நடக்க முடியாமல் விழுந்து இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
நேற்று காலை வரை தொடர்ந்து சத்து மருந்துகள் தண்ணீரில் கரைத்து கொடுக்கப்பட்டன. குளுக்கோசும் ஏற்பட்டது. வனத்துறையினரும் கண்காணித்து வந்தனர்.
எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் காட்டெருமை இறந்துவிட்டது. அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் குழி தோண்டி காட்டெருமையின் உடல் புதைக்கப்பட்டது.