பல்லடம் அருகே ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.4 லட்சம் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை


பல்லடம் அருகே ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.4 லட்சம் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 19 March 2019 10:30 PM GMT (Updated: 19 March 2019 9:54 PM GMT)

பல்லடம் அருகே அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

பல்லடம்,

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தன. இதைத்தொடர்ந்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்கும் வகையில் அரசு அதிகாரிகள், போலீசார் கொண்ட பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் பல்லடம் அருகே உள்ள கே.அய்யம்பாளையத்தில் நிலைக்கண்காணிப்பு குழு தலைவரான பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திக்குமார் தலைமையில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்கள்.

இந்த நிலையில் அந்த வழியாக வந்த ஒரு காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த காரில் ரூ.4 லட்சம் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக காரில் வந்தவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள வடசித்தூர் மெட்டுவாவி பகுதியை சேர்ந்த தண்டபாணி (வயது 67) என்பதும், அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதும் தெரியவந்தது.

அத்துடன் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை தாசில்தார் அலுவலகத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

Next Story