வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு மையத்தில் கலெக்டர் ஆய்வு


வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு மையத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 20 March 2019 4:00 AM IST (Updated: 20 March 2019 3:45 AM IST)
t-max-icont-min-icon

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்கும் மையத்தை கலெக்டர் அருண் ஆய்வு செய்தார்.

புதுச்சேரி,

புதுவை தொகுதி நாடாளுமன்ற தேர்தல், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலின்போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்கும் அறை மற்றும் பதிவான வாக்குகளை எண்ணும் மையம் லாஸ்பேட்டை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக அங்கு வாக்குப் பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்கும் பாதுகாப்பு அறைகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதுவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அருண் நேற்று மாலை அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்கும் அறைகள், வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்படும் இடங்களை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வகுப்தா மற்றும் தேர்தல் நடத்தும் பல்வேறு துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலெக்டர் அருண் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

தேர்தலின்போது தொகுதி வாரியாக பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் எங்கு பாதுகாப்பாக வைக்கப்படும் என்ற விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் மண்ணாடிப்பட்டு, திருபுவனை, ஊசுடு, மங்கலம், வில்லியனூர், உழவர்கரை, லாஸ்பேட்டை, காலாப்பட்டு, உப்பளம், உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும்.

மோதிலால்நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் கதிர்காமம், இந்திராநகர், தட்டாஞ்சாவடி, காமராஜ் நகர், முத்தியால்பேட்டை, ராஜ்பவன், நெல்லித்தோப்பு, அரியாங்குப்பம், மணவெளி, ஏம்பலம், நெட்டப்பாக்கம், பாகூர் ஆகிய சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்படும் எந்திரங்கள் வைக்கப்படும்.

Next Story