அழகப்பா பல்கலைக்கழகம் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குகிறது துணைவேந்தர் பேச்சு


அழகப்பா பல்கலைக்கழகம் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குகிறது துணைவேந்தர் பேச்சு
x
தினத்தந்தி 20 March 2019 4:00 AM IST (Updated: 20 March 2019 3:53 AM IST)
t-max-icont-min-icon

அழகப்பா பல்கலைக்கழகம் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்கி வருகிறது என்று பல்கலைக்கழக துணைவேந்தர் பேசினார்.

காரைக்குடி,

அழகப்பா பல்கலைக்கழக அறிவியல் வளாக கூடத்தில் நானோ தொழில்நுட்ப பன்னாட்டு கருத்தரங்கு 2019 தொடக்கவிழா நடைபெற்றது. விழாவை பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராஜேந்திரன், காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் கலைச்செல்வி, தென்கொரியா, சியோல், டாங்கக் பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் சீஜூன் ஆகியோர் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தனர். குருநாதன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு நினைவுப் பரிசும் புத்தகப் பரிசும் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் கருத்தரங்கு மலரை வெளியிட்டனர்.

இதில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேசியதாவது:– இந்த பன்னாட்டுக் கருத்தரங்கு, மாணவர்கள் தாங்கள் பயிலும் இடத்திலேயே கலந்து கொள்வதற்கும், சிறந்த விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுவதற்கும் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. அழகப்பா பல்கலைக்கழகம், இந்தியாவின் உயர்தரப் பல்கலைக்கழகங்களுள் ஒன்று, அதில் பயிலும் மாணவர்கள் பல்வேறு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் சிறந்த அறிவு பெற்றுள்ளனர்.

அழகப்பா பல்கலைக்கழகம், பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குகிறது. அந்த வகையில் ரூ.100 கோடி நிதியில் ரூசா 2.0 திட்டம், அறிவியல் துறைகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக சுமார் ரூ.7 கோடி மதிப்பில் என்.எம்.ஆர். மற்றும் எக்ஸ்.ஆர்.டி. என்னும் அதிநவீனக் கருவிகள் வாங்கப்பட உள்ளன. பல்கலைக்கழகம் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கான சிறந்த ஆராய்ச்சிச் சூழலை உருவாக்கி வருகிறது.

இந்த கருத்தரங்கில், அறிவியல் மற்றும் ஆராய்ச்சி அறிவை மாணவர்களிடையே பகிர்ந்து கொள்வதற்காக உலக அளவில் சிறந்த விஞ்ஞானிகள், வல்லுனர்கள் வந்துள்ளனர். நானோ தொழில்நுட்பம், மருத்துவத்துறை மற்றும் பல்வேறு தொழிலகத் துறைகளில் செயல்படுத்தும் வகையில் பரவியுள்ளது. குறிப்பாக மருத்துவத்துறையில் நோயைத் தடுப்பதற்கும் அடையாளம் காண்பதற்கும் குணப்படுத்துவதற்கும் நானோ அறிவியல் பயன்படுகிறது.

சூரிய மின்கலன்கள், லித்தியம் பேட்டரிகள், அதிநவீன மின்தேக்கிகள் ஆகியவற்றை உருவாக்குவதில் நானோ கருவிகள் குறிப்பிடத்தக்க பங்காற்றுகின்றன. இவ்வாறு அவர் கூறினார். இதில் பாலலட்சுமி உள்பட உதவிப்பேராசிரியர்கள், கருத்தரங்க அமைப்புச் செயலர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story