பணகுடி, தென்காசி பகுதிகளில் வாகன சோதனை- வியாபாரிகளிடம் ரூ.2 லட்சம் பறிமுதல்
பணகுடி, தென்காசி பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில், வியாபாரிகளிடம் இருந்து ரூ.2¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ராதாபுரம்,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை, தென்காசி ஆகிய இரு நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பறக்கும் படையினர் இரவு பகலாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரம் பகுதியில் சமூக நல பாதுகாப்பு திட்ட தாசில்தார் ராஜசேகரன் தலைமையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை மறித்து அதில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்த சுந்தர்ராஜன் (வயது 60) என்பதும், வாழைக்காய் வியாபாரி என்பதும் தெரியவந்தது. அவரிடம் ரூ.98 ஆயிரம் இருந்தது. ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான ராதாபுரம் தாசில்தார் முருகனிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோல் தென்காசி-மதுரை ரோட்டில் குத்துக்கல்வலசை பகுதியில் நேற்று காலை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் வெற்றிச்செல்வி தலைமையில் கண்காணிப்புக்குழு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் அதிகாரிகள், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லோடு ஆட்டோவை மறித்து அதில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை தாலுகா தலசிறா பகுதியை சேர்ந்த வியாபாரி நாசர் (45) என்பதும், அவர் ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் வைத்திருந்ததும் தெரியவந்தது. அந்த பணத்தை சுரண்டையில் காய்கறிகள் வாங்க கொண்டு செல்வதாக அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார். ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை.
இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு அவரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story