எப்போதும் வென்றான் அருகே, நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து டிரைவர் பலி


எப்போதும் வென்றான் அருகே, நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
x
தினத்தந்தி 19 March 2019 10:24 PM GMT (Updated: 19 March 2019 10:24 PM GMT)

எப்போதும் வென்றான் அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து டிரைவர் பலியானார்.

ஓட்டப்பிடாரம்,

தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றிக் கொண்டு நேற்று அதிகாலையில் கரூர் நோக்கி ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது. அந்த லாரியை நெல்லை மாவட்டம் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியை சேர்ந்த ஜெகஜோதி மகன் பிரேம்குமார் (வயது 22) என்பவர் ஓட்டிச் சென்றார். அவருக்கு மாற்று டிரைவராக நாங்குநேரி பரமன்குளத்தை சேர்ந்த மாடசாமி மகன் முத்துகுமார் (22) உடன் சென்றார்.

அதிகாலையில் லாரி எப்போதும் வென்றான் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. லாரி கவிழ்வதை அறிந்த டிரைவர் பிரேம்குமார் லாரியில் இருந்து வெளியே குதிக்க முயன்றபோது, லாரி கவிழ்ந்து உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். லாரியில் இருந்த முத்துகுமார் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த எப்போதும் வென்றான் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்கள் பிரேம்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த முத்துகுமார் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து எப்போதும் வென்றான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏரல் அருகே இடையற்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஈசாக்கு மகன் இம்மானுவேல் (22). இவர் தூத்துக்குடியில் உள்ள உறவினரின் மளிகை கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் சம்பவத்தன்று இரவில் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஸ்ரீவைகுண்டத்துக்கு புறப்பட்டு சென்றார். ஸ்ரீவைகுண்டம் அருகே சிவராமமங்கலத்தில் உள்ள வேகத்தடையில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த இம்மானுவேலுக்கு ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இம்மானுவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story