விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு 5 ஆண்டு சிறை - விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு


விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு 5 ஆண்டு சிறை - விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு
x
தினத்தந்தி 19 March 2019 10:30 PM GMT (Updated: 19 March 2019 10:25 PM GMT)

விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள குத்தாம்பூண்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (வயது 55), விவசாயி. இவருடைய அக்காள் அஞ்சலத்தின் மகள் தென்றல் என்பவர், அரசு திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தார்.

இதற்காக வருமான சான்றிதழை பெறுவதற்காக கடந்த 7.1.2011 அன்று குத்தாம்பூண்டி கிராம நிர்வாக அலுவலராக இருந்த சீத்தாராமன் (57) என்பவரை ராஜீவ்காந்தி அணுகினார். அதற்கு ரூ.1,500-ஐ லஞ்சமாக தர வேண்டும் என்று சீத்தாராமன் கூறினார். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று ராஜீவ்காந்தி கூறவே அப்படியானால் ரூ.500-ஐ குறைத்துக்கொண்டு ரூ.1,000 மட்டும் தருமாறு கறாராக கூறினார்.

இதையடுத்து அந்த லஞ்ச பணத்தை சீத்தாராமனிடம் ராஜீவ்காந்தி கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சீத்தாராமனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அதன் பிறகு அவர் துறை ரீதியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதுசம்பந்தமான வழக்கு விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.இதனிடையே சீத்தாராமன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரியா, குற்றம் சாட்டப்பட்ட சீத்தாராமனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து சீத்தாராமன் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story