தூத்துக்குடியில் ரெயில் மோதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாவு - தற்கொலையா? போலீசார் விசாரணை
தூத்துக்குடியில் ரெயில் மோதி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி டெலிபோன் காலனி புல்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மால்கம் பர்னாண்டோ (வயது 51). இவர் மணியாச்சி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற மால்கம் பர்னாண்டோ இரவு வெகு நேரம் ஆகியும் திரும்பி வரவில்லை.
இந்த நிலையில் நேற்று காலையில் தூத்துக்குடி மீளவிட்டான் சின்னக்கண்ணுபுரம் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் தலை நசுங்கிய நிலையில் மால்கம் பர்னாண்டோ இறந்து கிடந்தார்.
இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனே தூத்துக்குடி ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மால்கம் பர்னாண்டோ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மால்கம் பர்னாண்டோ நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடியில் இருந்து கோவை சென்ற ரெயில் மோதி இறந்திருக்கலாம் என ரெயில்வே போலீசார் தெரிவித்தனர். இருந்தபோதும் மால்கம் பர்னாண்டோ ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மால்கம் பர்னாண்டோ ரெயில்வே துறையில் ஏட்டாக பணியாற்றியதும், தற்போது தேர்தல் பறக்கும் படையில் பணியாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இறந்த மால்கம் பர்னாண்டோவுக்கு மேகலா என்ற மனைவியும், கேத்ரீன் என்ற மகளும், மரியோ என்ற மகனும் உள்ளனர். மேகலா தூத்துக்குடி கால்டுவெல் காலனியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கேத்ரீன் கோவையில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டும், மரியோ தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்கள்.
தூத்துக்குடியில் ரெயில் மோதி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story