உச்சிப்புளி அருகே வேன் மீது லாரி மோதி 2 பேர் பலி 7 பேர் படுகாயம்
உச்சிப்புளி அருகே வேன் மீது செங்கல் லாரி மோதியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பனைக்குளம்,
நெல்லை மாவட்டம் தென்காசியில் இருந்து ஒரு வேனில் 7 பேர் சாமி தரிசனம் செய்வதற்காக ராமேசுவரம் கோவிலுக்கு வந்தனர். இவர்கள் நேற்று ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு ஊருக்கு திரும்பினர். அப்போது வரும் வழியில் உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசை பகுதியில் அவர்கள் வந்து கொண்டிருந்தபோது பரமக்குடியில் இருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு ராமேசுவரம் நோக்கி வேகமாக சென்ற லாரி இந்த வேன் மீது மோதியது. இதில் அந்த ஆம்னி வேன் அப்பளம் போல நொறுங்கியது.
இதில் வேனில் வந்த தென்காசியை சேர்ந்த குட்டி(வயது 26), மகாராஜா(25) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் சுரேஷ்(20), கனகராஜ்(45),வேன் டிரைவர் ஆறுமுகராஜ்(39), தென்காசி ஆனந்தபுரம் சுரேஷ், இளஞ்சி இசக்கி ராஜா(42) ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனடியாக இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தகவல் அறிந்ததும் உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல், சப்–இன் ஸ்பெக்டர்கள் அன்சாரி, கார்த்தி மற்றும் போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இறந்த 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்சுகள் மூலம் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தின் போது லாரியில் வந்த தொழிலாளர்கள் விளத்தூர் பெருமாள் கோவிலை சேர்ந்த கோவிந்தராஜ்(27), மஞ்சூர் ஆனந்தராஜ்(31) ஆகியோருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் வழக்கு பதிந்து லாரி டிரைவர் புத்தனேந்தல் கிராமத்தை சேர்ந்த மாதவன்(30) என்பவரை கைது செய்து விசாரித்து வ ருகிறார்.