போலீஸ் அலுவலகத்தில் இளம் பெண் தீக்குளிக்க முயற்சி


போலீஸ் அலுவலகத்தில் இளம் பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 19 March 2019 10:45 PM GMT (Updated: 19 March 2019 10:33 PM GMT)

காதலனுடன் சேர்த்து வைக்க கோரி ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள டி.கருங்குளம் பகுதியை சேர்ந்தவர் ஹலிதாயாஸ்மின்(வயது28). இவர் நேற்று காலை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார்மனு அளிக்க வந்தார். அலுவலக நுழைவு வாயில் பகுதியில் திடீரென்று உடலில் மண்எண்ணெய் ஊற்றி கொண்டு தீவைத்து தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்ட பாதுகாப்பிற்கு நின்றிருந்த பெண் போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டு அலுவலகத்திற்குள் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து ஹலிதாயாஸ்மின் அளித்த மனுவில் கூறியதாவது:– எனக்கு ஏற்கனவே, முகம்மது ஆசிக் என்பவருடன் திருமணம் ஆகி ஒரு பெண், ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 3 ஆண்டுகளுக்கு முன்பு அவரை பிரிந்துதனியாக வாழ்ந்து வருகிறேன். கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு அவரிடம் இருந்து முறையாக விவாகரத்து பெற்றுவிட்டேன்.

இந்நிலையில், ராமநாதபுரம் இந்திராநகரை சேர்ந்த சதாம்உசேன்(28) என்பவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. அவர் தனியார் எலக்ட்ரானிக்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார். அவர் என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி என்னுடன் குடும்பம் நடத்தி வந்தார். இருவரும் கணவன்– மனைவி போல வாழ்ந்து வந்தோம். இந்நிலையில் அவருக்கு வீட்டில் வேறு ஒரு இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து வந்தனர். இதுபற்றி அறிந்த நான் அவரிடம் கேட்டபோது, என்னை அடித்து துன்புறுத்தியதுடன் கொலைமிரட்டல் விடுத்தார். இதுகுறித்து நான் ஜமாத்தார்கள் மற்றும் போலீஸ் நிலையத்தில் புகார்அளித்தேன்.

போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. சதாம் உசேன் மற்றும் உறவினர் பைரோஸ்கான் மற்றும் சிலர் எங்களின் கிராமத்திற்கு வந்து எங்களை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்க முற்பட்டனர். எனவே, போலீஸ் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து அதற்கான முயற்சி மேற்கொண்டேன். என்னை ஏமாற்றிய சதாம்உசேன் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார்.


Next Story