சேலம் புதிய பஸ்நிலையம் அருகே, 2 கடைகளில் 1.2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - உரிமையாளர்களுக்கு அபராதம்


சேலம் புதிய பஸ்நிலையம் அருகே, 2 கடைகளில் 1.2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - உரிமையாளர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 20 March 2019 4:15 AM IST (Updated: 20 March 2019 4:05 AM IST)
t-max-icont-min-icon

சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள 2 கடைகளில் 1.2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம்,

சேலம் மாநகராட்சி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுக்கும் வகையில் கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் அடிக்கடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த சோதனையின் போது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று மாநகர் நல அலுவலர் பார்த்திபன் தலைமையில் சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள 2 கடைகளில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது அந்த கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள், கப்புகள், தட்டுகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த 2 கடைகளில் இருந்து 1.2 டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களை விற்ற அந்த கடைகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, ‘சேலம் மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். மீறி விற்பனை செய்பவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்‘ என்றனர்.

Next Story