தலைவாசல் அருகே, கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை


தலைவாசல் அருகே, கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 20 March 2019 4:05 AM IST (Updated: 20 March 2019 4:05 AM IST)
t-max-icont-min-icon

தலைவாசல் அருகே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தலைவாசல், 

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள தெடாவூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45), கட்டிட தொழிலாளி. இவருக்கு 2 மனைவிகள். இவர்களில் முதல் மனைவி செல்வராணிக்கு, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்த செல்வராணி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் 2-வது மனைவி ராணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

அதே நேரத்தில் கட்டிட தொழிலாளியான சீனிவாசன் வேலைக்காக பல்வேறு ஊர்களுக்கு சென்றுள்ளார். கடந்த ஆண்டு சென்னைக்கு சென்ற இவர் கே.கே.நகரில் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். அப்போது அங்கு பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி கரிகாலன் தெருவை சேர்ந்த ராஜூ என்பவர் தனது மனைவி சித்ராவுடன் (40) கட்டிட வேலைக்கு வந்துள்ளார். அவர்களுக்கும் ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் வேலைக்கு சென்ற இடத்தில் சீனிவாசனுக்கும், சித்ராவுக்கும் அறிமுகம் ஏற்பட்டு நாளடைவில் நெருங்கி பழகி உள்ளனர். இவர்களின் கள்ளக்காதல் பற்றி யாருக்கும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற இடத்தில் சித்ரா திடீரென மாயமானார். அவரை அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் கிடைக்கவில்லை.

இதனிடையே சித்ரா, தனது கள்ளக்காதலன் சீனிவாசனுடன் நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்துக்கு வந்துள்ளார். பின்னர் வீரகனூர் அருகே தென்கரை கிராமத்தில் சீனிவாசனின் பெரியப்பா கணேசனின் வீட்டுக்கு அவர்கள் இருவரும் அன்று இரவு சென்று தங்கினர். நேற்று காலையில் அவர்கள் தங்கியிருந்த அறை கதவு நீண்டநேரமாகியும் திறக்காததால் சந்தேகம் அடைந்த கணேசன், கதவை திறந்து பார்த்தார்.

அங்கு சீனிவாசனும், சித்ராவும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் வீரகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, வீரகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குமரவேல் பாண்டியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரித்தனர்.

பின்னர் தற்கொலை செய்து கொண்ட கள்ளக்காதல் ஜோடியின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சித்ராவின் கணவர் ராஜூவுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த அவரிடம் போலீசார் புகாரை பெற்று சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சீனிவாசன், சித்ராவின் கள்ளக்காதல் வெளி உலகிற்கு தெரிந்தால் தங்களை பிரித்து விடுவார்களோ? என்று கருதி அந்த ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story