மருந்து கடை ஊழியர் சாவு, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா - சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு
மருந்து கடை ஊழியர் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா போராட்டம் நடத்தியதால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் மாவட்டம் வாழப்பாடி பேளூரை சேர்ந்தவர் லோகேஷ்வரன் (வயது 37). இவர் சேலம் குகைப்பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
மேலும் அதே பகுதியில் அறை எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்தார். கடந்த 17-ந்தேதி இரவு வேலை முடிந்து சென்றவர் மறுநாள் மதியம் வரை வேலைக்கு வரவில்லை.
இதையொட்டி அவருடன் வேலை பார்த்து வரும் சிலர் லோகேஷ்வரன் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது காலில் பலத்த காயத்துடன், ரத்தம் வழிந்தோடிய நிலையில் மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லோகேஷ்வரன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் செவ்வாய்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பஞ்சலிங்கம் மற்றும் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று லோகேஷ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு, பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து அவர் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் லோகேஷ்வரனின் மனைவி சாந்தி மற்றும் உறவினர்கள் நேற்று காலை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் அவர்கள் லோகேஷ்வரன் உடலை வாங்க மறுத்து அரசு ஆஸ்பத்திரி பிணவறை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், லோகேஷ்வரன் உடலில் பல இடங்களில் காயம் உள்ளது. அவர் அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளார். சாவில் மர்மம் உள்ளது. எனவே உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசாரிடம் முறையிட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.
அதன்பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறை முன்பு நேற்று காலை சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இறந்து போன லோகேஷ்வரனுக்கு, அனுசுயா (10), விஜயலட்சுமி(5) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
Related Tags :
Next Story