திருவாரூரில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார், மு.க.ஸ்டாலின் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்


திருவாரூரில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார், மு.க.ஸ்டாலின் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்
x
தினத்தந்தி 21 March 2019 4:30 AM IST (Updated: 21 March 2019 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் இருந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

திருவாரூர்,

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம்(ஏப்ரல்) 18-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் சேர்த்து நடத்தப்படுகிறது. தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் 20 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடு கிறது.

அதன் கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் சூறாவளி பிரசாரத்தை திருவாரூரில் இருந்து தொடங்குவதாக அறிவித்து இருந்தார்.

அதன்படி நேற்று திருவாரூரில் சன்னதி தெருவில் உள்ள தனது வீட்டில் இருந்து காலை 7 மணி அளவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிரசார பயணத்தை தொடங்கினார். கீழசன்னதி தெரு, வாசன் நகர், திருவள்ளுவர் நகர், மருதபாடி, முருகையா நகர், வடக்கு வடம்போக்கி தெரு, மேட்டு தெரு ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து திருவாரூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பூண்டி .கலைவாணன், நாகை நாடாளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் செல்வராசு ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார்.

அனைத்து பகுதிகளிலும் மு.க.ஸ்டாலினுக்கு மலர் தூவியும், சால்வை அணிவித்தும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்ற இடங்களில் எல்லாம் பள்ளி மாணவ-மாணவிகள், பெண்கள் உள்பட அனைவரும் மு.க.ஸ்டாலினுடன் ‘செல்பி’ எடுத்து கொண்டனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

வடக்கு வடம்போக்கி தெருவில் மீன் வியாபாரிகளிடம் நலம் விசாரித்த ஸ்டாலின் அவர்களிடம் கை கொடுத்து தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள், உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும் என்றார். மேலும் சன்னதி தெருவில் உள்ள குளிர்பான கடையில் வாக்கு சேகரித்த ஸ்டாலின், அங்கு பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்தார். ஒரு சிறுமி ஆசையுடன் காட்டிய நோட்டில் ஆட்டோகிராப் போட்டார். சுட்டெரிக்கும் வெயிலில் அனல் பறக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். திருவாரூர் அருகே உள்ள மணக்காலில் மகளிர் சுய உதவிக்குழுவினரை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நான் முதன் முதலில் மகளிர் சுய உதவிக்குழுவினரை சந்தித்து வாக்கு கேட்கிறேன். மகளிர் சுய உதவிக்குழுவை தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த 1989-ம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். பெண்கள் சொந்த காலில் நிற்க வேண்டும். யாருடைய தயவிலும் இருக்க கூடாது என்பதற்காகவும், தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் ஏற்படுத்திடும் நோக்கத்துடன் மகளிர் சுயஉதவிக்குழு உருவாக்கப்பட்டது.

தி.மு.க. ஆட்சியில்தான் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, வேலை வாய்ப்பில் 33 சதவீத இட ஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் இந்தியாவிலேயே முதன் முதலில் இட ஒதுக்கீடு என கொடுத்தவர் கருணாநிதி தான். கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை, விதவை பெண்களுக்கு மறுவாழ்வு திட்டம் கொண்டு வந்தார். ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகை வழங்கப்பட்டது. ஆனால் தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை.

தி.மு.க. சொன்னதை தான் செய்யும், செய்வதை தான் சொல்லும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகள் நிச்சயம் நிறைவேற்றி தரப்படும். மத்தியில் நம்முடைய ஆதரவில் தான் ஆட்சி அமையப்போகிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை. எனவே நம்முடைய ஆதரவில் அமையப்போகிற மத்திய ஆட்சியை பயன்படுத்தியும், அதேபோல் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் மூலம் தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படப்போகிறது.

அந்த வகையில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையின்படி கிராமப்புற பெண்களுக்கு தொழில் தொடங்கிட ரூ.50 ஆயிரம் வட்டியில்லா கடன் வழங்கப்படும். மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தங்களது பிரச்சினைகள் குறித்து பேச ஒவ்வொரு வட்டத்திலும் கூட்ட அரங்கம் கட்டித் தரப்படும்

நான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது பல்வேறு நலத்திட்ட உதவிகள் மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் நலனில் அக்கறை இல்லாத ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நாட்டை பற்றியோ, விவசாயிகளை பற்றியோ, மகளிரை பற்றியோ கவலைப்படாமல், தங்களைப்பற்றி மட்டுமே ஆட்சியாளர்கள் கவலைப்பட்டு வருகின்றனர். ஊழல் மிகுந்த ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது.

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் கொடுமை வேதனைக்குரியது. இதற்கு ஆளுங்கட்சியினரே துணையாக இருந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களே இந்த கொடுமைகளை செய்துள்ளனர். அவர்களை காப்பாற்ற இந்த அரசு துணை நிற்கிறது என்பது வெட்கப்பட வேண்டிய விசயம் ஆகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பிரசாரத்தின்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உடன் இருந்தார்.

Next Story