விளம்பர பேனரை அகற்றியபோது மின்சாரம் பாய்ந்து தம்பதி பலி
கம்பத்தில், விளம்பர பேனரை அகற்றியபோது மின்சாரம் பாய்ந்து தம்பதி பலியானார்கள்.
கம்பம்,
கம்பம் அப்பாவுபிள்ளை தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 50). இவர், வேலப்பர் கோவில் தெருவில் டீக்கடை நடத்தி வந்தார். அவருடைய மனைவி செந்தாமரைச்செல்வி (40). இவர்கள் கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள மாடி கட்டிடத்தில் செயல்படுகிற ஓம் சக்தி மன்ற பொறுப்பாளர்களாக இருந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஓம் சக்தி மன்றத்தை காலி செய்து, அங்குள்ள பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் கணவன்-மனைவி ஈடுபட்டனர். மன்றத்தில் உள்ள விளம்பர பேனரை அவர்கள் அகற்றி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த உயர் அழுத்த மின்சார கம்பியில் விளம்பர பேனர் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே முருகனும், செந்தாமரைச்செல்வியும் பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு வீரபாண்டி, இன்ஸ்பெக்டர் பொன்னிவளவன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த தம்பதிக்கு சுந்தரலிங்கம் (23) என்ற மகனும், ராமப்பிரியா (19) என்ற மகளும் உள்ளனர். மின்சாரம் பாய்ந்து தம்பதி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story