நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - அன்புமணி ராமதாஸ் பேச்சு


நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - அன்புமணி ராமதாஸ் பேச்சு
x
தினத்தந்தி 21 March 2019 4:45 AM IST (Updated: 21 March 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

‘நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும்’ என்று தர்மபுரியில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

தர்மபுரி,

தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் அறிமுக கூட்டம் தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் தலைமை தாங்கினார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மாவட்ட பால்வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், முன்னாள் எம்.பி. டாக்டர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் குருநாதன் வரவேற்று பேசினார்.

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி சார்பில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து அவர் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கோவிந்தசாமி, அரூர்(தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வி.சம்பத்குமார் ஆகியோரை அறிமுகப்படுத்தினார்.

இந்த கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

அ.தி.மு.க. தலைமையில் பா.ம.க., பா.ஜனதா, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மாபெரும் கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு இந்த கூட்டணி அமைந்தபோது இயற்கையான கூட்டணி என்று ஜெயலலிதா கூறி உள்ளார். தர்மபுரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும், 18 சட்டசபை தொகுதிகளிலும் இந்த கூட்டணி வெற்றி பெறும். பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய கூட்டணி கட்சிகளை சேர்ந்த அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. இது ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சியாகும். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியை எப்படியாவது அகற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கனவு காண்கிறார். அந்த கனவு கடைசி வரை நிறைவேறாது. இந்த கூட்டணியில் அன்புமணி, கே.பி.அன்பழகன், டி.ஆர்.அன்பழகன் என்று 3 அன்பு உள்ளது. கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் தர்மபுரி மாவட்ட மக்களை அன்பால் அரவணைத்து ஒருங்கிணைந்து செயல்பட்டு மாபெரும் வெற்றியை பெற்று தர வேண்டும். இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்கள். ஜெயலலிதாவின் ஆசியுடன் இந்த கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணி சார்பில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பேசினார்.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், வேலுமணி, கோபால், குமார், பெரியண்ணன், விசுவநாதன், மதிவாணன், பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேலுச்சாமி, பாரிமோகன், மாநில துணைத்தலைவர்கள் பாடிசெல்வம், சாந்தமூர்த்தி, மாவட்ட செயலாளர்கள் சண்முகம், இமயவர்மன், மாநில அமைப்பு துணைசெயலாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் பாலாஜி, பாலகிருஷ்ணன், செல்வக்குமார், மதியழகன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தை தொடர்ந்து பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் உள்ள தே.மு.தி.க., பா.ஜனதா, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.


Next Story