கடலூரில், பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் ரூ.6½ லட்சம் சிக்கியது
கடலூரில் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.6½ லட்சம் சிக்கியது.
கடலூர்,
தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்கவும், ஓட்டுக்காக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கவும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பறக்கும்படை, நிலை கண்காணிப்பு குழு, ஒரு வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் ஷிப்டு முறையில் 24 மணி நேரமும் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கடலூர் சட்டமன்ற தொகுதியில் தாசில்தார் நந்திதா தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் அடங்கிய 1-வது நிலைக்கண்காணிப்பு குழுவினர் கடலூர் அருகே உள்ள மருதாடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அந்த நபரிடம் இருந்த பையில் ரூ.1 லட்சத்து 46 ஆயிரத்து 140 இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் அந்த நபர் சின்னகங்கணாங்குப்பத்தை சேர்ந்த பட்டாணி வியாபாரி தமிழரசன் என்பதும், பரிக்கல்பட்டு பகுதியில் சில்லரை வியாபாரிகளிடம் இருந்து வசூலான பணத்தை கொண்டு வந்ததும் தெரியவந்தது. ஆனால் பணத்துக்கு எந்த ஒரு ஆவணமும் இல்லாததால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் தாசில்தார் கீதா தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் அடங்கிய பறக்கும் படையினர் கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூர் மார்க்கமாக தனித்தனி மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்த சத்தியபிரபு, பண்ருட்டியை சேர்ந்த குமரேசன் என்பதும், இதில் சத்தியபிரபுவிடம் ரூ.2 லட்சத்து 16 ஆயிரத்து 210-ம், குமரேசனிடம் ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்து 430-ம் என மொத்தம் ரூ.3 லட்சத்து 67 ஆயிரத்து 640 இருந்தது தெரியவந்தது. அவர்கள் மகளிர் சுய உதவிகுழுக்களிடம் இருந்து வசூல் செய்த பணத்தை கடலூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் டெபாசிட் செய்வதற்காக கொண்டு வந்ததாக அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ஆனால் பணத்துக்கு எந்தவித ஆவணமும் இல்லாததால் அவற்றை பறக்கும் படை தாசில்தார் பறிமுதல் செய்தார்.
அதேபோல அந்த வழியாக ஆட்டோவில் வந்த மஞ்சக்குப்பம் நேத்தாஜிநகரை சேர்ந்த செந்தில் என்பவரை பறக்கும்படையினர் சோதனை செய்தபோது, அவர் வைத்திருந்த பையில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் இருந்ததை கண்டுபிடித்தனர். புதுச்சேரி கன்னிக்கோவிலில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வசூலான பணத்தை கடலூரில் உள்ள தனியார் வங்கியில் டெப்பாசிட் செய்வதற்காக எடுத்து வந்ததாக தாசில்தார் கீதாவிடம், செந்தில் தெரிவித்தார். ஆனால் பணத்துக்கு உரிய ஆவணம் எதுவும் இல்லாததால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடலூரில் நேற்று ஒரே நாளில் பறக்கும்படை மற்றும் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.6 லட்சத்து 58 ஆயிரத்து 780 சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story