மயிலாடும்பாறை அருகே, தார்சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தம்
மயிலாடும்பாறை அருகே தார்சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
கடமலைக்குண்டு,
மயிலாடும்பாறை அருகே முத்தாலம்பாறை ஊராட்சியில் ஆட்டுபாறை கிராமம் உள்ளது. அதன் அருகே உள்ள உப்புத்துரை கிராமத்தில் இருந்து ஆட்டுபாறை கிராமத்துக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பஸ் போக்குவரத்து கிடையாது. இதனால் வெளியூர் செல்கிற ஆட்டுபாறை கிராம மக்கள் மோட்டார் சைக்கிள், ஆட்டோக்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் உப்புத்துரை கிராமத்தில் இருந்து ஆட்டுபாறை வரை அமைக்கப்பட்ட தார்சாலை போதிய பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்தது. சில இடங்களில் சாலையில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டன. இதனால் தார்சாலையை சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைக்கருத்தில் கொண்டு, கடந்த மாதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிதாக தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக பழைய தார்சாலை தோண்டி எடுக்கும் பணிகள் நடைபெற்று முடிந்தது. ஆனால் அதன்பிறகு தார்சாலை அமைக்கும் பணி திடீரென நிறுத்தப்பட்டது. இதற்கான காரணம் புரியாத புதிராக உள்ளது.
தற்போது ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக அந்த சாலை மோசமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் ஆட்டுபாறை கிராமத்துக்கு செல்வதற்கு மாற்றுப்பாதைகளை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இதன் காரணமாக வாகன ஓட்டிகள், கிராம மக்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படுகிறது. எனவே உப்புத்துரை-ஆட்டுபாறை இடையிலான தார்சாலை பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story