மாவட்ட தேர்தல் தொடர்பு மையத்தில் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக அதிக அழைப்புகள் வந்துள்ளன கலெக்டர் வீரராகவ ராவ் தகவல்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட தேர்தல் தொடர்பு மையத்தில் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக அதிக அழைப்புகள் வந்துள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட தேர்தல் தொடர்பு மையத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான வீரராகவ ராவ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். தேர்தல் நன்னடத்தை விதிமீறல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படை, நிலைத்த கண்காணிப்பு குழு வாகனங்களை ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்காணித்திடும் பணிகளை பார்வையிட்டார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தல் நன்னடத்தை விதிமீறல் தொடர்பாக கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக பறக்கும் படை, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 வீதம் மொத்தம் 12 குழுக்களும், நிலைத்த கண்காணிப்பு குழுக்கள் 12–ம் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி பறக்கும் படை மற்றும் நிலைத்த கண்காணிப்புக்குழுக்களின் செயல்பாடுகளை கண்காணித்திட ஏதுவாக ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இக்கண்காணிப்பு குழுக்களின் செயல்பாடுகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட தேர்தல் தொடர்பு மையத்திலிருந்து நேரடியாக கண்காணிக்கப்படுகிறது.
இப்பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் கூறுகையில், மாவட்ட தேர்தல் தகவல் மையத்தில் இதுவரை 1155 அழைப்புகள் வரப்பெற்றுள்ளன. பொதுவாக வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக அதிக அழைப்புகள் வரப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.