மதுரை சிறையில் இருந்து நிர்மலாதேவி ஜாமீனில் விடுதலை 11 மாதங்களுக்கு பின் வெளியே வந்தார்
மதுரை சிறையில் இருந்து பேராசிரியை நிர்மலாதேவி நேற்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவர் 11 மாதங்களுக்கு பின் வெளியே வந்துள்ளார்.
மதுரை,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் 17–ந் தேதி, கல்லூரி மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மதுரை மத்திய பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், நிர்மலாதேவிக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, நிர்மலாதேவி வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு விசாரிக்க இடைக்கால தடை விதித்தது. மேலும் நிர்மலாதேவிக்கு கடந்த 12–ந் தேதி ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டது.
அதை தொடர்ந்து நிர்மலாதேவியை ஜாமீனில் விடுதலை செய்வதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை அவரது வக்கீல் பசும்பொன்பாண்டியன் செய்து வந்தார். அப்போது நிர்மலாதேவிக்கு அவரது ரத்த சொந்தங்கள் ஜாமீன் கையெழுத்து போட தயக்கம் காட்டியதால், அவர் சிறையில் இருந்து விடுதலை ஆவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து வக்கீல், அவருடைய உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் நிர்மலாதேவியின் உறவினர்கள் ஜாமீன் ஆவணங்களில் கையெழுத்திட்டு, விருதுநகர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் கோர்ட்டு, நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ‘‘ஊடகங்கள், பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்கக்கூடாது’’ என்ற நிபந்தனை நிர்மலாதேவிக்கு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதுரை மத்திய சிறை அதிகாரிகளிடம், நிர்மலாதேவி ஜாமீனுக்குரிய கோர்ட்டு உத்தரவை வக்கீல் வழங்கினார். அதை தொடர்ந்து 11 மாதத்திற்கு பின்பு நேற்று காலை சிறையில் இருந்து நிர்மலாதேவி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவரை வக்கீல் பசும்பொன் பாண்டியன் அழைத்து வந்தார்.
அப்போது வக்கீல் நிருபர்களிடம் பேசிய போது, நிர்மலாதேவி மீது போடப்பட்டுள்ள வழக்கு பொய் வழக்கு என்பதை நீதிமன்றம் மூலமாக நிருபித்து, அந்த வழக்கில் இருந்து நிர்மலாதேவிக்கு விடுதலை பெறுவோம் என்றார்.