தேர்தல் நடவடிக்கைகளில் போலீசார் அரசியல் பாகுபாடு காட்டக் கூடாது சீனியர் போலீஸ் சூப்பிரண்டு வலியுறுத்தல்


தேர்தல் நடவடிக்கைகளில் போலீசார் அரசியல் பாகுபாடு காட்டக் கூடாது சீனியர் போலீஸ் சூப்பிரண்டு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 March 2019 4:30 AM IST (Updated: 21 March 2019 4:27 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடவடிக்கைகளின் போது போலீசார் அரசியல் பாகுபாடு காட்டக் கூடாது என்று மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் ஆல்வா வலியுறுத்தி உள்ளார்.

காரைக்கால்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி காரைக்கால் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு நடத்தை விதிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் டணால் தங்கவேல் கலையரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான விக்ராந்த் ராஜா தலைமை தாங்கினார்.

சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் ஆல்வா, துணை கலெக்டர் ஆதர்ஷ், போலீஸ் சூப்பிரண்டுகள் மாரிமுத்து, வீரவல்லவன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் விக்ராந்த் ராஜா பேசியதாவது:-

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் போலீசார் மிகவும் கவனமுடன் பணியாற்ற வேண்டும். அரசியல் பாகுபாடு பார்க்கக்கூடாது. முக்கியமாக, வாக்குப்பதிவு அறை உள்ளே போலீசார் செல்லக்கூடாது. சம்பந்தப்பட்ட அதிகாரி அழைத்தால் மட்டுமே செல்ல வேண்டும்.

வாக்குப்பதிவிற்கு வரும் பொதுமக்களிடம் போலீசார் கெடுபிடி காட்டக்கூடாது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுவதால், போலீசார் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் ஆல்வா பேசியதாவது:-

தேர்தல் நடத்தை விதிகளின்படி, நாம் அனைவரும் தேர்தல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளோம். தேர்தலின்போது, ஒவ்வொரு போலீசாரின் பங்கு முக்கியமானது. யாரும் அரசியல் சார்பாக செயல்படக்கூடாது. பாகுபாடு பார்க்கக்கூடாது. பொதுமக்களுக்கு தொந்தரவு இல்லாமல் வாகன சோதனை நடத்தவேண்டும். வீடியோ ஆதாரம் முக்கியமானது.

பிரசாரத்தின்போது புடவை, சட்டை உள்ளிட்ட துணிகள், வேறு வகையான அன்பளிப்புகள், பணம் வழங்கக்கூடாது. போலீசார் இதையும் ஆய்வு செய்யவேண்டும். யாரேனும் விதிகளை மீறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story