புதுவை நாடாளுமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றிக்கு பாடுபடுவோம் பா.ம.க. உறுதி


புதுவை நாடாளுமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றிக்கு பாடுபடுவோம் பா.ம.க. உறுதி
x
தினத்தந்தி 20 March 2019 11:15 PM GMT (Updated: 20 March 2019 10:59 PM GMT)

புதுவை நாடாளுமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று பா.ம.க. மாவட்ட செயலாளர் தேவமணி கூறினார்.

காரைக்கால்,

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு புதுவை தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காரைக்காலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, கட்சியின் மாவட்ட செயலாளர் தேவமணி தலைமை தாங்கினார்.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த தேர்தல் பொறுப்பாளர்கள் ரவி, சத்தியமூர்த்தி, மஸ்தான், அலாவுதீன், நாராயணசாமி, சாமிநாதன், நாகராஜன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் முடிவில், பா.ம.க. மாவட்ட செயலாளர் தேவமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் நாராயணசாமி 25 ஆண்டுகளுக்கு மேலாக மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி பொறுப்பில் இருந்தவர். ஆனால், ஒரு சிறிய மாநிலமான புதுவையை ஆள முடியாமல் தவித்து வருகிறார். அரசு அலுவலகங்கள் அனைத்தும் செயல்பாடின்றி முடங்கியுள்ளது. ஊழியர்கள் ஊதியம் பெற போராடி வருகின்றனர்.

அனைத்து அமைச்சர்களின் கையும் ஊழல், முறைகேடுகளில் ஓங்கி நிற்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் வெற்றிபெற்றால் அமைச்சர்கள் மீது ஊழல், முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு வலியுறுத்துவோம்.

எதற்கெடுத்தாலும் கவர்னரை குறைகூறி ஆட்சியை நடத்த முடியாமல் திணறிவருவது ஆளும் அரசுக்கு பெருத்த அவமானமாக உள்ளது. என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில், மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாக நடைபெற்றது. அனைத்து மக்களுக்கும் மாதாந்திர இலவச அரிசி தடையின்றி வழங்கப்பட்டது. புயலின் போது, அனைவருக்கும் பாரபட்சமின்றி தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. முதியோர், மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள் மேல்படிப்பு செலவு என பல்வேறு நலத்திட்டங்கள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் இலவச அரிசி திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் முடங்கி மக்கள் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். இதையும் மக்களிடம் எடுத்துக்கூறி, என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story