நடிகை சுமலதா குறித்து நிகில் குமாரசாமி மறைமுக தாக்கு
மண்டியா மக்களை ஏமாற்ற ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது என்று நடிகை சுமலதாவை நிகில்குமாரசாமி மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.
ஹலகூர்,
நாடாளுமன்ற தேர்தலை கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சி கூட்டணி அமைத்து எதிர்கொள்கிறது. இந்த கூட்டணியில், மண்டியா தொகுதி ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார். இதே தொகுதியில் போட்டியிட நடிகை சுமலதா காங்கிரஸ் சார்பில் போட்டியிட டிக்கெட் கேட்டார். ஆனால் கூட்டணியில் ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்கியதால் அதிருப்தி அடைந்த சுமலதா சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
இதனால் நடிகை சுமலதா, நிகில் குமாரசாமி இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் மண்டியாவில் சூறாவளி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா கரடகெரே கிராமத்தில்நிகில் குமாரசாமி நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
நான் எந்த சுயநலத்திற்காகவும் இங்கு போட்டியிட வரவில்லை. எனது தாத்தா தேவேகவுடா, தந்தை குமாரசாமி வழியில் மக்கள் சேவை செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன். அதனால் தான் மண்டியா ெதாகுதியில் போட்டியிடுகிறேன்.
மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் ஜனதாதளம்(எஸ்) கட்சி வெற்றி பெற்றுள்ளது. மண்டியா மாவட்டத்தை பற்றிய அறிவு எங்களிடம் இருக்கிறது. எனவே என்னை உங்கள் வீட்டுபிள்ளை என நினைத்து ஆசிர்வதித்து தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டும். விவசாயிகள் தான் நமது ஹீரோக்கள். தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற இடமெல்லாம் திரண்டு வந்து விவசாயிகள் என்னை உற்சாகமாக வரவேற்றனர்.
என்னை தோற்கடிக்க எதிரிகள் தந்திரங்களை கையாளுகிறார்கள். அந்த கூட்டம் மண்டியா மாவட்ட மக்களை ஏமாற்ற புறப்பட்டுள்ளனர். எந்த காரணத்தை கொண்டும் அவர்களுக்கு நீங்கள் (மக்கள்) ஆதரவு கொடுக்காதீர்கள். (அதாவது நடிகை சுமலதாவை தான் நிகில்குமாரசாமி மறைமுகமாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.)
இன்று (அதாவது நேற்று) தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பு தடை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ஆனால் இதுபோன்ற கீழ்த்தரமான அரசியலை தேவேகவுடா குடும்பத்தினர் செய்ததில்லை. செய்யமாட்டோம். போராடி வெற்றி பெறுவேனே தவிர, கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடமாட்டேன்.
யார் குற்றச்சாட்டு கூறுகிறார்களோ, அவர்களே தொலைக்காட்சி ஒளிபரப்பை தடை செய்துவிட்டு எங்கள் மீது ஏன் குற்றம்சாட்டக் கூடாது?. எனவே அதை நீங்கள் சிந்தித்து பாருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக அந்த கிராமத்தில் உள்ள ஆஞ்சநேய சாமி கோவிலில் நிகில் குமாரசாமி சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருடன் மந்திரி டி.சி.தம்மண்ணா உள்பட பலர் இருந்தனர்.
ஜோதிடரின் அறிவுரைபடி நிகில் குமாரசாமி இன்று வேட்பு மனு தாக்கல்
மண்டியா தொகுதியில் போட்டியிடும் நிகில் குமாரசாமி இன்று (வியாழக்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜோதிடர் ஒருவர் கூறி அறிவுரை படி இன்று காலை 11.30 மணி முதல் பகல் 12 மணிக்குள் மண்டியா கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். உடன் அவரது தாயும், எம்.எல்.ஏ.வுமான அனிதா குமாரசாமி, தாத்தா தேவேகவுடா ஆகியோர் செல்வார்கள் எனவும் கூறப்படுகிறது.