நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும் - என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும் - என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பேட்டி
x
தினத்தந்தி 20 March 2019 9:45 PM GMT (Updated: 20 March 2019 11:23 PM GMT)

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கூறினார்.

திருச்செந்தூர்,

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், புதுச்சேரி மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான என்.ரங்கசாமி நேற்று காலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர், கோவில் விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது என்.ரங்கசாமி கூறியதாவது:-

வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகம், புதுச்சேரியில் அ.தி.மு.க. வலுவான கூட்டணியை அமைத்து உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் தேர்தல் அறிக்கை விரைவில் அறிவிக்கப்படும். புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு உள்ளது. நாங்கள் கட்சி தொடங்கும்போதும் இதே கோரிக்கையை பிரதானமாக வைத்துதான் தொடங்கினோம். தற்போதும் அந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் கோகுலகிருஷ்ணன் எம்.பி., என்.ஆர். காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் பாலன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story