அம்பை தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் மத்திய தேர்தல் செலவின பார்வையாளர் ஆய்வு
அம்பை தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் மத்திய தேர்தல் செலவின பார்வையாளர் நேற்று ஆய்வு செய்தார்.
அம்பை,
நெல்லை நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களது செலவினம் வரையறுக்கப்பட்டுள்ள தொகைக்கு மிகாமல் கணக்கீடு செய்வது குறித்த ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நேற்று அம்பை தாலுகா அலுவலகத்தில் நடந்தது. மத்திய தேர்தல் செலவின பார்வையாளர் மணி தலைமை தாங்கினார். சேரன்மாதேவி தாசில்தார் சந்திரன் முன்னிலை வகித்தார். அம்பை தாசில்தார் வெங்கடேஷ் வரவேற்றார்.
கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நடத்தும் பொதுக்கூட்டங்கள், பிரச்சார வாகனம், அதற்காக செலவு செய்யப்படும் மின் விளக்கு, கொடி, மைக் செட் போன்ற அனைத்தையும் வீடியோ கேமராவில் பதிவு செய்ய வேண்டும். பறக்கும் படை, செக் போஸ்ட் போன்ற அனைத்தும் முறையாக செயல்படுவதை கண்காணிக்க வேண்டும்.
வேட்பாளர்கள் ஒவ்வொறுவருக்கும் தொகுதி அளவில் வரையறுக்கப்பட்ட தேர்தல் செலவு தொகைக்கு மிகாமல் இருக்க கண்காணிக்கப்பட வேண்டும். அதற்கான பதிவேடுகள் முறையாக பராமரித்து அறிக்கை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதையடுத்து அந்த அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை, நியூஸ் சேனல், தொலைக்காட்சி உள்ளிட்டவைகளை அவர் ஆய்வு செய்தார். அவருடன் துணை தாசில்தார் வள்ளிநாயகம் உள்ளிட்ட வருவாய் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story