மதுராந்தகம் அருகே ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.3 கோடி பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை


மதுராந்தகம் அருகே ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.3 கோடி பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 22 March 2019 4:00 AM IST (Updated: 21 March 2019 11:07 PM IST)
t-max-icont-min-icon

மதுராந்தகம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி ஏ.டி.எம்.மில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.3 கோடியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மதுராந்தகம்,

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள். வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த செய்யூர் எல்லையம்மன் கோவில் பகுதியில் வேளாண் துணை அலுவலர் சந்தானம் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனஞ்செயன், ஏட்டுகள் முருகதாஸ், எல்லப்பன், பிரசாத் ஆகியோர் அடங்கிய தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பும் வேனை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஏ.டி.எம்.களில் நிரப்புவதற்காக ரூ.3 கோடியே 2 லட்சம் கொண்டு சென்றது தெரியவந்தது. இந்த பணம் கொண்டு செல்வதற்காக உரிய ஆவணங்கள் ஊழியர்களிடம் இல்லை.

இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் செய்யூர் தாசில்தார் செந்தில்குமாரிடம் பணத்தை ஒப்படைத்தனர். அதனைத்தொடர்ந்து ஏ.டி.எம். பணம் கருவூலத்தில் வைக்கப்பட்டது.

இதேபோல் மதுராந்தகம் வில்வராயநல்லூரில் புள்ளியியல் ஆய்வாளர் சதீஷ்குமார் தலைமையில் ஏட்டுகள் ஆனந்தன், வினோத்குமார் அடங்கிய தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னை வேளச்சேரியை சேர்ந்த சற்குரு (50) என்பவர் ஓட்டி வந்த காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.2 லட்சத்து 790 இருந்தது.

அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து மதுராந்தகம் தாசில்தார் ஜெயசித்ராவிடம் ஒப்படைத்தனர்.

Next Story