பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை, 5 பேருக்கு ஆயுள் தண்டனை


பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை, 5 பேருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 21 March 2019 10:45 PM GMT (Updated: 21 March 2019 6:13 PM GMT)

பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

சேலம், 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சென்றாயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பூபதி (வயது 31), ஆனந்தபாபு (29), ஆனந்த் (22), பாலகிருஷ்ணன் (28), பிரபாகரன் (26). இவர்கள் கடந்த 2014 பிப்ரவரி மாதம் 14-ந் தேதி வாழப்பாடியை சேர்ந்த 10 வயது சிறுமியை அவரது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் காட்டு பகுதிக்கு கடத்தி சென்றனர்.

இதையடுத்து அந்த சிறுமியை பூபதி உள்ளிட்ட 5 பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனால் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். இதைத்தொடர்ந்து 5 பேரும் சென்றாயன்பாளையம் மலையடிவார பகுதியில் உள்ள மரத்தில் சிறுமியை நிர்வாண நிலையில் தூக்கில் போட்டு விட்டு சென்றனர். இந்த சம்பவம் சேலம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன் பேரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபதி, ஆனந்தபாபு, ஆனந்த், பாலகிருஷ்ணன், பிரபாகரன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனிடையே அவர்கள் 5 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சேலம் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் விசாரணை முடிந்து கடந்த 12-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால் நீதிபதி தீர்ப்பு தேதியை 19-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் வழக்கின் விசாரணையின் போது பூபதி உள்பட 5 பேரும் குற்றவாளிகள் என்றும், இதற்கான தண்டனை 21-ந் தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்படும் என அறிவிக்கப்பட்டதால் குற்றவாளிகள் 5 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். இதனால் கோர்ட்டு வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. மாலையில் இந்த வழக்கில் நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பு அளித்தார்.

அப்போது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததற்காக பூபதி, ஆனந்தபாபு, ஆனந்த், பாலகிருஷ்ணன், பிரபாகரன் ஆகிய 5 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், 5 பேருக்கும் தலா ரூ.40 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சம் அபராதமும் விதித்தும், தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார்.

5 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டாலும் அவர்கள் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருப்பதால் ஆயுள் தண்டனையாக கருதப்படும்.

Next Story