மேகங்களால் உண்டாகும் மின்னழுத்த ஆற்றலை சேமித்து பயன்படுத்தினால் சென்னைக்கு அரை மணி நேரம் மின்வினியோகம் செய்ய முடியும் - காஸ்மிக் கதிர் ஆய்வக பேராசிரியர் தகவல்
மேகங்களால் உண்டாகும் மின்னழுத்த ஆற்றலை சேமித்து பயன்படுத்தினால், சென்னைக்கு அரை மணி நேரம் மின்வினியோகம் செய்ய முடியும் என்று காஸ்மிக் கதிர் ஆய்வக பேராசிரியர் கூறினார். மத்திய அரசுக்கு சொந்தமான காஸ்மிக் கதிர் ஆய்வகம் ஊட்டி ராஜ்பவனில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆய்வகத்தின் பேராசிரியர் சுனில் குப்தா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊட்டி,
கதிர்வீச்சுகளை பதிவு செய்து, அளவிடும் ‘கிரெப்ஸ்-3‘ மியுவான் தொலைநோக்கி ஊட்டி மேல்கவ்வட்டி அருகே உள்ள ரேடியோ வானியல் மையத்தில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தொலைநோக்கியில் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி மேகங்களால் உண்டான சக்தி வாய்ந்த மின்னழுத்தத்தின் அளவு 130 கோடி வோல்ட் என்று பதிவாகி உள்ளது. இந்த அளவானது, அதற்கு முந்தைய அளவை விட 10 மடங்கு அதிகம். இதன் மூலம் மேகங்களால் அதிக மின்னழுத்தம் உண்டாவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
மேகங்களால் 100 கோடி வோல்ட் வரை மின்னழுத்தம் உருவாகும் என்று கடந்த 1927-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற வில்சன் என்பவர் கணித்து உள்ளார். மேலும் இந்த மின்னழுத்தமானது 100 மெகா வோல்ட் காமா கதிர்களை உருவாக்க தேவைப்படும் என்றும் தெரிவித்து உள்ளார். கிரெப்ஸ்-3 மியுவான் தொலைநோக்கி மத்திய அரசின் டாடா அடிப்படை ஆராய்ச்சி கல்வியகத்தின் காஸ்மிக் கதிர் ஆய்வகத்தினால் ஊட்டியில் வடிவமைக்கப்பட்டது. இந்த ஆய்வகம் இந்தியா மற்றும் ஜப்பானில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் கூட்டு முயற்சியால் நடத்தப்படுகிறது.
தற்போது அதிகபட்சமாக மேகங்களால் உண்டாகும் மின்னழுத்தம் 1.3 பில்லியன் வோல்ட்(ஒரு பில்லியன்-100 கோடி), மேகத்தின் வேகம் மணிக்கு 60 கிலோ மீட்டர் மற்றும் உயரம் 11.4 கிலோ மீட்டர் என்று விஞ்ஞானிகளால் அளவிடப்பட்டு உள்ளது. மேகங்களால் அதிக மின்னழுத்தம் உண்டாகும் நேரத்தில் குறிப்பிட்ட உயரத்தில் பறக்கும் விமானம் மற்றும் அதற்குள் இருக்கும் பயணிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் ஆற்றல் உலகத்தில் உள்ள மிகப்பெரிய அணுமின் அல்லது நீர்மின் அல்லது அனல்மின் ஆற்றல் இயக்கிகளுக்கு சமமானது ஆகும். இந்த ஆற்றலை சேமித்து பயன்படுத்த முடிந்தால் புதுடெல்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களுக்கு 30 நிமிடம் மின்னாற்றல் வழங்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story