மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 99 வழக்குகள் பதிவு - கலெக்டர் தகவல்


மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 99 வழக்குகள் பதிவு - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 22 March 2019 4:15 AM IST (Updated: 22 March 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 99 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார். தேனி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான பல்லவி பல்தேவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேனி,

மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்படும். இதற்காக மாவட்டத்தில் 7 ஆயிரத்து 102 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வாக்களிக்க சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்வது, வாக்குச்சாவடிக்கு வந்து செல்வதற்கு உதவியாளர் தேவை என்றால் அதற்கான தன்னார்வலர்களை நியமிப்பது போன்ற பணிகள் நடந்து வருகின்றன. பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.22 லட்சத்து 86 ஆயிரத்து 650 மற்றும் ரூ.5 ஆயிரம் மதிக்கத்தக்க பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் உரிய ஆவணங்களை மேல்முறையீட்டு அலுவலரிடம் தாக்கல் செய்ததால் ரூ.13 லட்சத்து 54 ஆயிரத்து 300 உடனடியாக திருப்பி வழங்கப்பட்டுள்ளது. மீதம் தொகை குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக 99 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த முறை வாக்களிக்கும் போது வாக்குச்சீட்டு மட்டும் கொண்டு சென்றால் வாக்களிக்க முடியாது. வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் சென்றால் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

நகர் பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் செய்வதற்கு அனுமதி கிடையாது. கிராமப்புற பகுதிகளில் வீட்டின் உரிமையாளரின் அனுமதி பெற்று சுவர் விளம்பரம் செய்யலாம். நகர் பகுதிகளில் அரசு கட்டிடங்களில் 289 இடங்களில் வரையப்பட்ட சுவர் விளம்பரங்களும், ஊரக பகுதிகளில் 2 ஆயிரத்து 802 இடங்களில் உள்ள அரசு கட்டிடங்களில் வரையப்பட்ட சுவர் விளம்பரங்களும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அழிக்கப்பட்டு உள்ளன. அத்துடன் தனியாருக்கு சொந்தமான 300 இடங்களில் அனுமதி இன்றி வரைந்த சுவர் விளம்பரங்களும் அழிக்கப்பட்டுள்ளன.

சிலைகளை மறைக்க வேண்டிய தேவை இல்லை. செல்போன் செயலி மூலம் இதுவரை 5 புகார்கள் வந்துள்ளன. தேர்தல் பணியில் சுமார் 7 ஆயிரம் அலுவலர்கள், 2 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர். இவர்களும் வாக்களிக்க தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்காக தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், போலீசார், டிரைவர்கள், பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு உள்ளிட்ட குழுக்களில் பணியாற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர்கள் ஆகியோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

பணியில் ஈடுபடுபவர்களில் தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் வகையில் தேர்தல் பணியில் ஈடுபடுவதற்கான சான்றிதழ் வழங்கப்படும். அந்த சான்றிதழை காண்பித்து பணியில் ஈடுபடும் ஏதாவது ஒரு வாக்குச்சாவடியில் வாக்களிக்கலாம். தேனி நாடாளுமன்ற தொகுதியை சாராதவர் எனில் அவருக்கு தபால் ஓட்டுக்கான படிவம் வழங்கப்படும். இடைத்தேர்தலை பொறுத்தவரை தங்களின் வாக்கு உள்ள சட்டமன்ற தொகுதிக்குள் பணியாற்றினால் தேர்தல் பணியில் ஈடுபடுவதற்கான சான்றிதழும், வேறு சட்டமன்ற தொகுதியில் பணியாற்றினால் தபால் ஓட்டுக்கான படிவமும் வழங்கப்படும்.

தேனி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் 4 ஆயிரத்து 744 பேர் வெளி மாநிலங்களில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு இந்த முறை ஆன்லைன் மூலம் வாக்குப்பதிவு விவரங்களை பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்பு, வாக்குச்சீட்டு அச்சடிக்கப்பட்டு ராணுவ வீரர்கள் பணியாற்றும் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து அவர்கள் வாக்களித்த பின்னர் ஆன்லைன் மூலம் விவரங்களை பெறுவதற்கு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story