ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ரெயில் மோதி சாவு தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்


ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ரெயில் மோதி சாவு தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்
x
தினத்தந்தி 22 March 2019 4:30 AM IST (Updated: 22 March 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

தென்தாமரைகுளம் அருகே ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ரெயில் மோதி பரிதாபமாக இறந்தார்.

தென்தாமரைகுளம்,

குமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகே ஆண்டிவிளை பகுதியை சேர்ந்தவர் அருள் டேனியல் (வயது 62). இவர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு ஜாய் ஸ்டார்வி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

இதில் மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து சிங்கப்பூரில் வசித்து வருகிறார். மற்றொரு மகள் மார்த்தாண்டத்தில் கணவருடன் தங்கி உள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் அருள் டேனியல் சிங்கப்பூரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார். பின்னர், நேற்று முன்தினம் காலை சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார்.

அருள் டேனியலுக்கு சொந்தமான தென்னந்தோப்பு சாமிதோப்பு அருகே விஜயநகரி பகுதியில் உள்ளது. இந்த தோப்பின் அருகில் ரெயில் தண்டவாளம் செல்கிறது. ஊர் திரும்பிய அருள் டேனியல் அன்றைய தினம் மாலையில் தென்னந்தோப்பை சுற்றி பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை தண்டவாளம் அருகில் நிறுத்தி விட்டு அருள் டேனியல் சென்றார்.

தென்னந்தோப்பை சுற்றி பார்த்து விட்டு வெளியே வந்த அவர், மோட்டார் சைக்கிளை எடுக்க தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக ரெயில் வந்தது. இதனை கவனிக்காமல் அருள் டேனியல் சென்றதாக தெரிகிறது.

இதனால் அருள் டேனியல் மீது ரெயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்த பகுதி ஆள் நடமாட்டம் இல்லாத இடம் என்பதால் யாருக்கும் தெரியவில்லை. நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் அருள் டேனியல் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தென்தாமரைகுளம் போலீசார், நாகர்கோவில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அருள் டேனியலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த நாளில் ரெயில்மோதி சப்-இன்ஸ்பெக்டர் இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story