தேர்தல் செலவின கணக்குகள் பற்றிய ஆய்வுக்கூட்டம் கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடந்தது


தேர்தல் செலவின கணக்குகள் பற்றிய ஆய்வுக்கூட்டம் கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 21 March 2019 11:00 PM GMT (Updated: 21 March 2019 9:44 PM GMT)

தேர்தல் செலவின கணக்குகள் மற்றும் கண்காணிப்பு குழுக்களின் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலை கண்காணிக்க தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் செலவின பார்வையாளர்கள் சியாம்குமார், ஓம்பிரகாஷ் படேல், அமித்குப்தா ஆகியோர் மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவ் தலைமையில் தேர்தல் செலவுக்கணக்குகள் மற்றும் கண்காணிப்பு குழுக்களின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதனை தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர் கூறியதாவது:- நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலுக்காக மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதிக்கு 3 வீதம் மொத்தம் 12 பறக்கும் படை குழுக்களும், 12 நிலைத்த கண்காணிப்பு குழுக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் துணை தாசில்தார், வட்டார வளர்ச்சி நிலை அலுவலர் தலைமையில் ஒரு காவல்துறை சார்பு ஆய்வாளர், 3 காவலர்கள், 1 வீடியோ பதிவாளர் என மொத்தம் 6 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழு அலுவலர்கள் அந்தந்த பகுதிகளை தேர்தல் நன்னடத்தை விதிமீறல்கள் தொடர்பாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை பறக்கும்படை, நிலைத்த கண்காணிப்பு குழு அலுவலர்கள் தணிக்கையின் மூலம் முறையான ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட மொத்தம் ரூ.82 லட்சத்து 17 ஆயிரத்து 390 மதிப்பில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுஉள்ளது. தொடர்ந்து தினமும் பறக்கும்படை மற்றும் நிலைத்த கண்காணிப்புக்குழு அலுவலர்கள் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுபட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து தேர்தல் செலவின பார்வையாளர்கள் தெரிவித்ததாவது:- தேர்தல் வாக்குப்பதிவு நாள் நெருங்குவதை தொடர்ந்து தேர்தல் கண்காணிப்பு குழுவினர் கூடுதல் கவனத்துடன் பணியாற்ற வேண்டும். தேர்தல் கண்காணிப்பு குழுக்களின் வாகனங்கள் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கண்காணிப்பு குழுவினர் தங்களது ஆய்வின்போது முறையான ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை கைப்பற்றினால் அதன் விவரங்களை தேர்தல் நடத்தும் அலுவலருக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிப்பதோடு வழக்கு பதிவு செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

மேலும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யத் தொடங்கியதை தொடர்ந்து அனைத்து தேர்தல் வேட்பாளர்களும் தேர்தல் செலவினங்களை நடுநிலையோடு எவ்வித பாரபட்சமின்றி தேர்தல் விதிமுறைகளுக்குட்பட்டு தேர்தல் செலவுகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதையும் தினந்தோறும் சேகரித்து முறைப்படுத்தி ஆவணப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, உதவி தேர்தல் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story