இருவேறு விபத்து: பெண் உள்பட 2 பேர் பலி


இருவேறு விபத்து: பெண் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 22 March 2019 4:15 AM IST (Updated: 22 March 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம் மற்றும் மதுரையில் நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்துபோயினர். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருமங்கலம், 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோகினூரைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 41). இவர் தச்சு தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி கண்மணி (38). சரவணன் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் நெல்லை மாவட்டம் களக்காட்டில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் சென்றார்.

மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் திருமங்கலத்தை அடுத்த மேலக்கோட்டை சமத்துவபுரம் பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அரியலூரில் இருந்து தூத்துக்குடிக்கு சிமெண்டு ஏற்றி சென்ற லாரி, கார் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் காரில் வந்த கண்மணி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது கணவர் சரவணன், உறவினர்கள் செந்தில்குமார், சொர்ணலதா, டிரைவர் வள்ளியப்பன் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று மதுரை திருநகர் பகுதியை சேர்ந்தவர் பழனிக்குமார்(45), வேன் டிரைவர். இவர் நேற்று கோச்சடை சோதனை சாவடி அருகே ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த தண்ணீர் லாரி பழனிக்குமார் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்துபோனார். இதுகுறித்து கரிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story