புனேயில் 13 சுற்றுலா பஸ்கள் தீயில் எரிந்து நாசம்
புனே சின்டேவாடியில் 13 சுற்றுலா பஸ்கள் தீயில் எரிந்து நாசமாகின.
புனே,
புனே சின்டேவாடி பகுதியில் கேரேஜ் வைத்திருப்பவர் அசோகாராய். இவரது கேரேஜில் பழுது பார்க்கும் பணிக்காக பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதில், நேற்றுமுன்தினம் காலை அங்கிருந்த ஒரு பஸ்சை மெக்கானிக் ஒருவர் இயக்க தொடங்கியபோது, திடீரென பஸ்சின் என்ஜீனில் தீ பிடித்தது.
இதை பார்த்த ஊழியர்கள் கேரேஜில் இருந்த தீ அணைப்பு சாதனத்தை வைத்து தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் தீ மளமளவென அருகில் நின்ற பஸ்களிலும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.
இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 7 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில், கேரேஜில் நிறுத்தப்பட்டிருந்த 13 சுற்றுலா பஸ்களில் 8 சொகுசு பஸ்கள் முற்றிலுமாகவும், 5 பஸ்கள் பகுதியளவும் தீயில் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்த தீ விபத்து குறித்து அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story