மும்பை, தானேயில் ஹோலி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்


மும்பை, தானேயில் ஹோலி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
x
தினத்தந்தி 21 March 2019 11:45 PM GMT (Updated: 21 March 2019 10:04 PM GMT)

மும்பை, தானேயில் ஹோலி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை வீசி மகிழ்ந்தனர்.

மும்பை, 

குளிர்காலம் முடிந்து தொடங்கும் வசந்தகாலத்தை, வண்ணங்களால் வரவேற்கும் விதமாக இந்துக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் தங்களது துன்பங்கள் எல்லாம் தொலைந்து வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும் என மக்கள் நம்புகின்றனர். ஹோலி கொண்டாட்டம் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது.

பொதுமக்கள் மரக்கட்டை, வைக்கோல், மாட்டு சாணம் மற்றும் பழைய பொருட்களால் அமைக்கப்பட்ட ஹோலிகா அரக்கியை வீதிகளில் எரித்தனர். அப்போது, வீடுகளில் பூஜை செய்து எடுத்து வந்த தேங்காயை அந்த தீயில் வீசி கடவுளை வழிபட்டனர். இவ்வாறு செய்தால் தீயில் எரியும் தேங்காயுடன் தங்களது பிரச்சினைகளும், துன்பங்களும் நீங்கும் என மக்கள் நம்புகின்றனர்.

பெரும்பாலான இடங்களில் பயங்கரவாதம், ஊழல், வறட்சி போன்றவை ஹோலிகா அரக்கியாக எரிக்கப்பட்டன. இதையடுத்து பொதுமக்கள் வீடுகளுக்கு சென்று பூரன் போலி எனும் இனிப்பு தயாரித்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

நேற்று காலை அனைவரும் உறவினர்கள், நண்பர்கள் மீது வண்ணப்பொடிகளை தூவி ஹோலியை கொண்டாடி மகிழ்ந்தனர். வான் உயர்ந்த கட்டிடங்கள் முதல் குடிசைப்பகுதிகள் வரை எல்லா இடங்களிலும் ஹோலி பண்டிகை களைகட்டியிருந்தது.

பெரும்பாலானவர்கள் வண்ணப்பொடிகள் பூசப்பட்ட முகங்களுடன் தான் சுற்றித்திரிந்தனர்.

பலர் வண்ணப்பொடியை உடல் முழுவதும் பூசிக்கொண்டு அலைந்ததையும் காண முடிந்தது.

இதேபோல மும்பையில் உள்ள தாதர் சிவாஜிபார்க், ஜூகு, கிர்காவ், வெர்சோவா கடற்கரைகள், நட்சத்திர ஓட்டல்கள், மும்பைக்கு வெளியே உள்ள பண்ணை வீடுகள், கேளிக்கை விடுதிகளிலும் ஹோலி கொண்டாட்டம் களைகட்டி இருந்தது.

தேர்தல் நேரம் என்பதால் பல இடங்களில் அரசியல் கட்சியினரும் பொதுமக்களுடன் ஹோலியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

தானே, மும்பை மேற்கு, கிழக்கு புறநகர் பகுதிகளில் அரசியல் கட்சியினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஹோலி கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் மராத்தி நடிகர்கள், நடிகைகள் கலந்துகொண்டனர்.

Next Story