அவினாசி அருகே, பேக்கரியின் மேற்கூரையை பிரித்து பணம் திருட்டு
அவினாசி அருகே பேக்கரியின் மேற்கூரையை பிரித்து பணம் திருடிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
அவினாசி,
அவினாசி- திருப்பூர் மெயின் ரோட்டில் அவினாசிலிங்கம் பாளையம் உள்ளது. இங்கு மளிகை கடை, பேக்கரி, ஓட்டல், பனியன் ஷோரூம், ஒர்க் ஷாப் என அடுத்தடுத்து கடைகள் உள்ளன.
இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் பேக்கரி உரிமையாளர் பேக்கரியை திறந்து உள்ளே சென்றார். அப்போது பேக்கரியின் மேற்கூரை பிரிக்கப்பட்ட நிலையில், மேஜை டிராயர் உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் டிராயரை பார்த்தபோது அதில் வைத்து இருந்த ரூ.4,500 -ஐ மர்ம ஆசாமிகள் திருடி சென்று இருப்பது தெரியவந்தது.
இதே போல் அதே ரோட்டில் உள்ள பொக்லைன் ஒர்க் ஷாப்பின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அங்குவைத்து இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த பீரோவில் பணம் இல்லை என்று கூறப்படுகிறது.
அதே போல் அதன் அருகில் உள்ள ஓட்டலில் உள்ள பீரோவையும் உடைக்க முயற்சி நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து அவினாசி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பேக்கரிக்கு சென்ற மர்ம ஆசாமிகள் பேக்கரியின் மேற்கூரையை பிரித்து உள்ளே சென்று டிராயரில் வைத்து இருந்த பணத்தை எடுத்து சென்று உள்ளனர்.
மேலும் அதன் அருகில் உள்ள பொக்லைன் ஒர்க்ஷாப் மற்றும் ஓட்டலில் திருட முயன்று இருப்பதும் தெரியவந்தது. இதில் ஒர்க்ஷாப் பீரோவில் பணம் இல்லாததால் அங்கிருந்த ஆவணங்கள், மற்றும் ரசீது புத்தகங்களை சிதறி விட்டு மர்ம ஆசாமிகள் சென்றுள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story