திண்டுக்கல் மாவட்டத்தில், பாலியல் புகார்களை பெறுவதற்கு போலீஸ் அதிகாரிகள் நியமனம்
திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்களை பெறுவதற்கு போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
திண்டுக்கல்,
18 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளையும் பாதுகாக்கும் வகையில், போக்சோ சட்டம் (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்) உருவாக்கப்பட்டது. இதன் மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இதில் சிறுவர்கள் பாதிக்கப்பட்டாலும் போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
பாலியல் தாக்குதல், பாலியல் வன்முறை, சீண்டல், ஆபாச படம் எடுக்க குழந்தைகளை பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு தண்டனை வழங்கப்படுகிறது. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்படுகிறது. அதேபோல் ஓராண்டுக்குள் வழக்கை முடித்து, அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை வழங்கப்படும்.
மேலும் போலீசார், பாதுகாப்பு படையினர், ராணுவத்தினர், அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக்கு உரியவர்கள் குற்றம் செய்தால் அதிக தண்டனை வழங்கப்படும்.
இந்த நிலையில் ஐகோர்ட்டு நீதிபதிகளை கொண்ட போக்சோ கமிட்டி பாலியல் குற்றம் தொடர்பான புகார்களை போலீஸ் அதிகாரிகள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அல்லது செல்போன் வழியாகவோ பெறலாம் என்று உத்தரவிட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களை பெறுவதற்கு போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அதன்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகாஷினி (செல்போன் எண்-94981 04442, தொலைபேசி எண்-0451 2461700), துணை சூப்பிரண்டு மோகன்ராஜ் (செல்போன் எண்-97981 42960), தொலைபேசி எண்-0451 2422143), இன்ஸ்பெக்டர் ஜாஸ்மின்மும்தாஜ் (செல்போன் எண்-83000 36678, தொலைபேசி எண்-0451 2427928) ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்களை, பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம், என்று கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story