சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்றால் அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்துறை செயலாளருக்கு நளினி கடிதம்


சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்றால் அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்துறை செயலாளருக்கு நளினி கடிதம்
x
தினத்தந்தி 22 March 2019 4:27 AM IST (Updated: 22 March 2019 4:27 AM IST)
t-max-icont-min-icon

சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பது உண்மையானால், 7 பேரை விடுதலை செய்வதற்கான அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று உள்துறை செயலாளருக்கு நளினி கடிதம் அனுப்பி உள்ளார்.

வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற நளினி வேலூர் பெண்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவருடைய கணவர் முருகன் ஆண்கள் சிறையில் உள்ளார். ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனைபெற்று 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, முருகன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னர் நடவடிக்கை எடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழக கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் இதுவரை 7 பேரையும் விடுதலைசெய்வது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் வேலூர் பெண்கள் சிறையில் இருக்கும் நளினி, சிறை கண்காணிப்பாளர் மூலம் உள்துறை செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, ஆயுள்தண்டனை வழங்கப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறேன். என்னையும், என்னுடன் இதே வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று சிறையில் இருக்கும் என் கணவர் முருகன் உள்ளிட்ட மற்ற 6 பேரையும் இந்திய அரசியலமைப்பு சட்டம் 161-ன் படி முன்விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கடந்த 9.9.2018 அன்று முடிவு செய்து கவர்னரின் கையெழுத்துக்காக அனுப்பியது.

அமைச்சரவை முடிவின்படி கடந்த 5 மாதங்களாக எங்களை விடுதலைசெய்யவில்லை. 10 ஆண்டுகள் தண்டனை முடித்த ஆயிரக்கணக்கானவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நாங்கள் 28 ஆண்டுகளை கழித்துள்ளோம்.

காலதாமதமாகும் நீதி, மறுக்கப்படும் நீதிக்கு சமமானது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது உண்மையானால் அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். இவ்வாறு நளினி கடிதத்தில் கூறி உள்ளார்.

Next Story