பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் குடியாத்தம் செயல்வீரர்கள் கூட்டத்தில் ஏ.சி.சண்முகம் பேச்சு


பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் குடியாத்தம் செயல்வீரர்கள் கூட்டத்தில் ஏ.சி.சண்முகம் பேச்சு
x
தினத்தந்தி 22 March 2019 4:33 AM IST (Updated: 22 March 2019 4:33 AM IST)
t-max-icont-min-icon

பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்று குடியாத்தம் செயல்வீரர்கள் கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் கூறினார்.

குடியாத்தம்,

குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அ.தி.மு.க. கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம் குடியாத்தத்தில் நடைபெற்றது. குடியாத்தம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வி.ராமு, பேரணாம்பட்டு நகர செயலாளர் எல்.சீனிவாசன், பா.ம.க. மாநில துணைத்தலைவர் என்.டி.சண்முகம், மாநில துணை பொதுச்செயலாளர் இளவழகன், மாவட்ட செயலாளர் ரவி, தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், பா.ஜ.க. மாவட்ட தலைவர் கொ.வெங்கடேசன், புதிய நீதிக்கட்சி மாவட்ட தலைவர் அசோக்குமார், மாவட்ட செயலாளர் குமரவேல், தமிழ் மாநில காங்கிரஸ் நகர தலைவர் அருணோதயம், புதிய தமிழக மாவட்ட தலைவர் கந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் அ.தி.மு.க. நகர செயலாளர் ஜெ.கே.என்.பழனி வரவேற்றார்.

கூட்டத்துக்கு நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் பணிக்குழு தலைவரும், அமைச்சருமான கே.சி.வீரமணி தலைமை தாங்கி, வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தையும், குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கஸ்பா ஆர்.மூர்த்தி ஆகியோரை அறிமுகப்படுத்தி பேசினார்.

அதைத் தொடர்ந்து ஏ.சி.சண்முகம் பேசுகையில், ‘தமிழக அரசியல் வரலாற்றில் இதேபோன்ற மெகா கூட்டணி அமைந்தது இல்லை. தோல்வி பயம் வந்துவிட்டதால் தி.மு.க. கூட்டணியினர் வாய்க்கு வந்தபடி பேசுகின்றனர். என்னை வளர்த்துவிட்டதும் இந்த குடியாத்தம் தான். புதிய நீதிக்கட்சியை தந்ததும் இந்த குடியாத்தம் தான். நான் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் குடியாத்தத்தில் எனது சொந்த செலவில் இலவச திருமண மண்டபம் கட்டி தரப்படும். கிராமப்புற மாணவர்களின் வசதிக்காக இலவச கணினி பயிற்சி மையம் அமைக்கப்படும். 6 மாதத்திற்கு ஒருமுறை 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை வரவழைத்து பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் மூலம் வேலை வாய்ப்புகளை பெற்று தருவேன். பேரணாம்பட்டு, கே.வி.குப்பத்தில் அரசு கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் சுப்பிரமணி, சின்னையா, ஆவின் தலைவர் வேலழகன் உள்பட அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் பேரணாம்பட்டு ஒன்றிய செயலாளர் பொகளூர் பிரபாகரன் நன்றி கூறினார்.

இதேபோல ஆம்பூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆம்பூர் அருகே உள்ள ஆலாங்குப்பம் கிராமத்தில் நடந்தது. அமைச்சர் நிலோபர் கபில் முன்னிலை வகித்தார். ஆம்பூர் நகர செயலாளர் எம்.மதியழகன் வரவேற்றார். இதில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், ஆம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் ஜோதிராமலிங்கராஜா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

கூட்டத்தில் ஏ.சி.சண்முகம் பேசுகையில், ‘வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 6 சட்டபேரவை தொகுதிகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் 24 மணி நேரமும் இயங்கும். அங்கு மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி, படித்து முடித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறித்த ஆலோசனை மற்றும் அதற்கு தயார் ஆவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படும். பெங்களூருவில் உள்ள என்னுடைய ஆஸ்பத்திரியில் 6 தொகுதி மக்களுக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும். இலவச திருமண மண்டபம், விளையாட்டு திடல், உடற்பயிற்சி அரங்கம், மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். தொழில் பூங்கா அமைப்பதற்கான சாத்தியகூறுகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாவலனாக இருப்பேன்’ என்றார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. டி.கே.ராஜா, தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன், த.மா.கா. மாவட்ட தலைவர் கே.குப்புசாமி மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் ஆர்.வெங்கடேசன் நன்றி கூறினார்.

Next Story