கர்நாடகத்தில் 21 தொகுதிகளுக்கு வெளியானது : பா.ஜனதா வேட்பாளர் முதல் பட்டியல்


கர்நாடகத்தில் 21 தொகுதிகளுக்கு வெளியானது : பா.ஜனதா வேட்பாளர் முதல் பட்டியல்
x
தினத்தந்தி 22 March 2019 12:20 AM GMT (Updated: 22 March 2019 12:20 AM GMT)

கர்நாடகத்தில் பா.ஜனதாவின் வேட்பாளர் முதல் பட்டியல் வெளியானது. அதில் 21 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் பா.ஜனதாவில் இணைந்த உமேஷ் ஜாதவ் மற்றும் முன்னாள் மந்திரி ஏ.மஞ்சு ஆகியோருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரு, 

நாடாளுமன்றத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. கர்நாடகத்தை பொறுத்தவரையில் தேர்தல் 2 கட்டமாக ஏப்ரல் 18 மற்றும் 23-ந் தேதிகளில் நடக்கிறது.

ஏப்ரல் 18-ந் தேதி முதல்கட்டமாக உடுப்பி-சிக்கமகளூரு, ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா, துமகூரு, மண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர், பெங்களூரு புறநகர், பெங்களூரு வடக்கு, பெங்களூரு மத்திய, பெங்களூரு தெற்கு, சிக்பள்ளாப்பூர், கோலார் ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. 2-வது கட்ட தேர்தல் மீதமுள்ள 14 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ந் தேதி நடக்கிறது.

முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 2-வது நாளில் நடிகை சுமலதா உள்பட 16 பேர் மனுக்களை தாக்கல் செய்தனர். 3-வது நாளில் 16 பேர் மனு தாக்கல் செய்தனர். கடந்த 3 நாட்களில் மட்டும் மொத்தம் 38 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மனு தாக்கல் தொடங்கி 3 நாட்கள் ஆகியும் காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பா.ஜனதா கட்சி டெல்லியில் நேற்று வேட்பாளர் முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது. 21 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த 21 வேட்பாளர்களில் 14 பேர் தற்போது எம்.பி.யாக இருக்கிறார்கள். மத்திய மந்திரிகள் சதானந்தகவுடா, அனந்தகுமார் ஹெக்டே, ரமேஷ் ஜிகஜினகி ஆகிய 3 பேருக்கும் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரசில் இருந்து விலகிய உமேஷ் ஜாதவுக்கு கலபுரகி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சித்தராமையா மந்திரிசபையில் மந்திரியாக பணியாற்றிய சீனிவாச பிரசாத், காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தார். அவருக்கு சாம்ராஜ்நகரில் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

அதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரசில் இருந்து விலகிய ஏ.மஞ்சுவுக்கு ஹாசன் தொகுதியில் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. பா.ஜனதாவில் இன்னும் 2 எம்.பி.க் களுக்கு டிக்கெட் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

கோலார், பெங்களூரு தெற்கு, மண்டியா, பெங்களூரு புறநகர், சிக்கோடி, ராய்ச்சூர், கொப்பல் ஆகிய 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.



1. பெலகாவி - சுரேஷ் அங்கடி

2. பாகல்கோட்டை - கத்திகவுடர்

3. விஜயாப்புரா - ரமேஷ் ஜிகஜினகி

4. கலபுரகி - உமேஷ் ஜாதவ்

5. பீதர் - பகவந்த் கூபா

6. பல்லாரி - தேவேந்திரப்பா

7. ஹாவேரி - சிவக்குமார் உதாசி

8. தார்வார் - பிரகலாத் ஜோஷி

9. உத்தரகன்னடா - அனந்தகுமார் ஹெக்டே

10. தாவணகெரே - சித்தேஸ்வர்

11. சிவமொக்கா - பி.ஒய்.ராகவேந்திரா

12. உடுப்பி-சிக்கமகளூரு - ஷோபா

13. ஹாசன் - ஏ.மஞ்சு

14. தட்சிண கன்னடா - நளின்குமார் கட்டீல்

15. சித்ரதுர்கா - ஏ.நாராயணசாமி

16. துமகூரு - ஜி.எஸ்.பசவராஜூ

17. மைசூரு - குடகு - பிரதாப்சிம்ஹா

18. சாம்ராஜ்நகர் - சீனிவாச பிரசாத்

19. பெங்களூரு வடக்கு - சதானந்தகவுடா

20. பெங்களூரு மத்திய - பி.சி.மோகன்

21. சிக்பள்ளாப்பூர் - பி.என்.பச்சேகவுடா.

Next Story