மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் - குலாலர் சங்க மாநில தலைவர் வலியுறுத்தல்


மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் - குலாலர் சங்க மாநில தலைவர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 March 2019 10:45 PM GMT (Updated: 22 March 2019 6:37 PM GMT)

மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று குலாலர் சங்க மாநில தலைவர் கூறினார்.

திருவாரூர், 

திருவாரூரில் மண்பாண்ட தொழிலாளர்களின் குலாலர் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் நாராயணன் தலைமை தாங்கி பேசினார். இதில் திருவாரூர் மாவட்ட தலைவர் பக்கிரிசாமி, மாவட்ட செயலாளர் குமார், நாகை மாவட்ட தலைவர் ஜெகநாதன், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பழனிசங்கர், மகளிரணி தலைவி கலைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் மாநில தலைவர் நாராயணன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மண்பாண்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் மழைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கிட வேண்டும். மாவட்டம் தோறும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு தொழிற்பயிற்சி கல்லூரி அமைத்து தர வேண்டும். மண்பாண்டம் செய்ய தேவையான மண்ணை அனைத்து மாவட்டங்களிலும் எடுத்து கொள்ள ஒரே மாதிரியான அரசாணை தமிழக அரசு வெளியிட வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்துள்ள மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அனைவருக்கும் மின்சாரத்தால் இயங்க கூடிய மணி சக்கரம் இலவசமாக வழங்க வேண்டும்.

மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றத்தால் மண்பாண்ட பொருட்கள் சேதம் அடைவதை தவிர்க்க சேமிப்பு கிடங்கு அரசு அமைத்து தர வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மண்பாண்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவாரண நிதி தமிழக அரசு வழங்கவில்லை. வருகின்ற நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணிக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் ஆதரவு அளித்து வெற்றி பெற செய்திடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story