கீழ்வேளூர் அருகே, அனுமதியின்றி மணல் அள்ளிய 4 பேர் கைது - டிராக்டர் பறிமுதல்


கீழ்வேளூர் அருகே, அனுமதியின்றி மணல் அள்ளிய 4 பேர் கைது - டிராக்டர் பறிமுதல்
x
தினத்தந்தி 23 March 2019 4:15 AM IST (Updated: 23 March 2019 12:07 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் படியும், உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின் பேரிலும் தனிப்படை போலீசார் கீழ்வேளூர் போலீஸ் சரகம் வடக்குவெளி கிராமம் அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஆற்று மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் டிராக்டரில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் டிராக்டர் டிரைவர் வடக்குவெளியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் பூங்குன்றம் (வயது 31), வடக்கு புத்தர்மங்கலத்தை சேர்ந்த கதிரவன் (38), அதே பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி மகன் அம்பேத்கார் (27), டிராக்டர் உரிமையாளர் கீழ்வேளூர் வடக்கு வீதியை சேர்ந்த பழனிராஜா (35) ஆகியோர் என்பதும், இவர்கள் உரிய அனுமதியின்றி கீழ்வேளூர் பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து மணல் அள்ளி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

Next Story