சங்கராபுரத்தில் வாகன சோதனையில் ரூ.67 ஆயிரம் பறிமுதல் - பறக்கும் படையினர் நடவடிக்கை
சங்கராபுரத்தில் நடந்த வாகன சோதனையில் ரூ.67 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சங்கராபுரம்,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் பறக்கும் படையினர் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி இளந்தென்றல் தலைமையில் நேற்று காலை சங்கராபுரம்-மயிலாம்பாறை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை வழிமறித்து சோதனை நடத்தியதில் ரூ.67ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த விருகாவூரை சேர்ந்த சின்னையன் மகன் வெங்கடேசன் என்பவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், விருகாவூரில் இருந்து ரிஷிவந்தியத்துக்கு ரூ.67 ஆயிரத்தை எடுத்து சென்றதும், அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது.
இதையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து, சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரெத்தினமாலாவிடம் ஒப்படைத்தனர்.
அப்போது தாசில்தார் பாண்டியன், கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சற்குணம், தனி தாசில்தார் கமலம், தேர்தல் தனி தாசில்தார் வைரக்கண்ணன், மண்டல துணை தாசில்தார் பரந்தாமன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story