பண்ணாரி அம்மன் கோவில் உண்டியல் பணம் உள்பட ஈரோடு மாவட்டத்தில் 7 இடங்களில் ரூ.1½ கோடி பறிமுதல் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி சோதனை


பண்ணாரி அம்மன் கோவில் உண்டியல் பணம் உள்பட ஈரோடு மாவட்டத்தில் 7 இடங்களில் ரூ.1½ கோடி பறிமுதல் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 22 March 2019 11:00 PM GMT (Updated: 22 March 2019 8:51 PM GMT)

பண்ணாரி அம்மன் கோவில் உண்டியல் பணம் உள்பட ஈரோடு மாவட்டத்தில் 7 இடங்களில் ரூ.1½ கோடியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தார்கள்.

ஈரோடு,

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி உரிய ஆவணம் இல்லாமல் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லக்கூடாது. அப்படி யாராவது கொண்டு செல்கிறார்களா? என்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கண்காணித்து, ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டுசெல்லும் பணத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

ஈரோடு மாவட்டத்திலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் கோபி அருகே கோவை பிரிவு என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று காலை வாகன சோதனை நடத்தினார்கள்.

அப்போது அந்த வழியாக ஒரு ஜீப் வந்தது. அதை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் விசாரித்தபோது, ஜீப்பில் இருந்தவர்கள் தங்களை சத்தி அருகே உள்ள ராஜன் நகரில் செயல்படும் ஒரு வங்கியின் ஊழியர்கள் என்றும், ஈரோட்டில் உள்ள அந்த வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு ரூ.91 லட்சம் கொண்டு செல்வதாகவும் கூறினார்கள். ஆனால் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதைத்தொடர்ந்து பணம் கொண்டுசெல்லும் பெட்டியை பறக்கும் படை அதிகாரிகள் திறக்க சொன்னார்கள்.

ஆனால் அதற்கான சாவி ஈரோட்டில் உள்ள வங்கி அதிகாரியிடம் உள்ளது என்று சொன்னார்கள். இதனால் பறக்கும் படை அதிகாரிகள் பணம் கொண்டுவரப்பட்ட ஜீப்பை கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு கொண்டு சென்றார்கள்.

மேலும் பணப்பெட்டியின் சாவி வந்த பிறகு பணத்தை சரிபார்ப்போம். அதன்பின்னர் உரிய ஆவணங்களை காட்டினால் வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிடுவோம் என்று பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

பிரசித்திபெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் கடந்த 3 நாட்களுக்கு முன் நிறைவுபெற்றது.

விழாவைத் தொடர்ந்து கோவில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அதில் ரூ.91 லட்சம் இருந்தது. வழக்கமாக பண்ணாரி அம்மன் கோவில் உண்டியல் பணம் ராஜன் நகரில் உள்ள ஒரு வங்கியில் செலுத்தப்படும். அதன்படி நேற்று முன்தினம் அந்த வங்கியில் செலுத்தப்பட்டது.

இதற்கிடையே பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தது பண்ணாரி அம்மன் கோவில் உண்டியல் பணம் என்று தெரியவந்துள்ளது.

இதேபோல் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மோகனசுந்தரம் தலைமையில் அதிகாரிகள் பெருந்துறையில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் ஈங்கூர் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்கள்.

அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு வேன் வந்தது. அதிகாரிகள் அதை தடுத்து நிறுத்தி அதில் பயணம் செய்தவரிடம் சோதனை செய்தார்கள்.

அப்போது அவரிடம் 87 ஆயிரத்து 500 ரூபாய் இருந்தது. அதற்கு உரிய ஆவணங்களும் அவரிடம் இல்லை.

இதுபற்றி நடத்திய விசாரணையில் அவர் அந்தியூர் ரெட்டிபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பதும், அவர் கரூர் மாவட்டம் கன்னிவாடியில் நடைபெறும் சந்தைக்கு ஆடுகள் வாங்க சென்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை பெருந்துறை தாசில்தார் துரைசாமியிடம் ஒப்படைத்தார்கள்.

சிவகிரியை அடுத்துள்ள விளக்கேத்தியில், நேற்று முன்தினம் இரவு பறக்கும் படை அதிகாரிகள் அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார்கள். அப்போது அந்த காருக்குள் பயணம் செய்த சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள மோட்டூரை சேர்ந்த விவசாயி கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி 1 லட்சத்து 39 ஆயிரத்து 400 ரூபாய் கொண்டு சென்றது கண்டு பிடிக்கப்பட்டது. அவர் கன்னிவாடி சந்தைக்கு ஆடுகள் வாங்க பணத்தை கொண்டு சென்றதாக கூறினார். இதைத்தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதை மொடக்குறிச்சி தாசில்தார் அஷ்ரப்புன்னிஷாவிடம் ஒப்படைத்தார்கள்.

அந்தியூர் அருகே அத்தாணி கைகாட்டி பகுதியில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக வந்த ஒரு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார்கள்.

அப்போது அதில் பயணம் செய்த கேரள மாநிலம் சாலக்குடியை சேர்ந்த பாபு என்பவரிடம் ரூ.1½ லட்சம் இருந்தது தெரிந்தது.

அவர் வாழைப்பழத்தார்களை வாங்குவதற்காக அந்த பணத்தை கொண்டுசெல்வதாக கூறினார். ஆனால் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் ரூ.1½ லட்சத்தை பறிமுதல் செய்து அந்தியூர் தாசில்தார் கணேசனிடம் ஒப்படைத்தார்கள்.

ஈரோடு பெரியார் நகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை அவர்கள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையின்போது அவரது மோட்டார் சைக்கிளில் ரூ.71 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்த சுஜித் (வயது 23) என்பதும், அவரிடம் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ரூ.71 ஆயிரத்தை பறிமுதல் செய்து, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோவில் அருகே கொண்டையன் காட்டுவலசு என்ற இடத்தில் நேற்று பகல் 3 மணியளவில், தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக ஒரு கார் ஒன்று வந்தது. சந்தேகத்தின் பேரில், பறக்கும்படை அதிகாரிகள் அந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார்கள்.

அப்போது காரின் பின்புறப்பகுதியில் கட்டு, கட்டாக 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் ரூ.45 லட்சம் இருந்தது.

இதையடுத்து காரில் வந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதில் அந்த பணம் ஈரோட்டில் உள்ள ஒரு வங்கிக்கு சொந்தமானது என்றும், அந்த பணத்தை காஞ்சிக்கோவிலில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் வைக்க கொண்டு சென்றதாகவும் ஒரு தனியார் நிறுவன ஊழியர்கள் கூறினார்கள். ஆனால், அதற்குரிய ஆவணங்கள் எதுவும் அவர்களிடமில்லை.

இதைத்தொடர்ந்து, வாகனத்துடன் ரூ.45 லட்சத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து பெருந்துறை தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

பவானி அடுத்த பெரியபுலியூர் அருகே தயிர்பாளையம் பிரிவு என்ற இடத்தில் நேற்று மதியம் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சந்திரசேகரன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையின் ஈடுபட்டிருந்தார்கள்.

அப்போது 2 வாலிபர்கள் மோட்டார்சைக்கிளில் வந்தார்கள். சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் மோட்டார்சைக்கிளை நிறுத்தி 2 பேரிடமும் சோதனை செய்தார்கள்.

அப்போது அவர்களிடம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 65 ரூபாய் இருந்தது. இதனால் அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

அதில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஆலாம்பாளையத்தை சேர்ந்த வெங்கடேசன் (25), கலியனூரை சேர்ந்த முருகானந்தம் ஆகியோர் என்றும், அவர்கள் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு நிதி நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும், அந்த நிறுவனத்துக்கு சொந்தமான பணத்தை கடன் வாங்கியவர்களிடம் இருந்து வசூல் செய்து வருவதாகவும் கூறினார்கள்.

ஆனால் அந்த பணத்தை உரிய ஆவணங்கள் இல்லாததால் அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் பவானி தாசில்தார் வீரலட்சுமியிடம் அதை ஒப்படைத்தார்கள்.

நேற்று முன்தினம் தொடங்கி நேற்று மாலையும் ஈரோடு மாவட்டத்தில் 7 இடங்களில் 1 கோடியே 42 லட்சத்து 17 ஆயிரத்து 965 ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒவ்வொரு இடத்திலும் பறிமுதல் செய்த பணத்தை அந்தந்த தாசில்தாரிடம் ஒப்படைத்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், உரிய ஆவணங்களை காட்டி பணத்தை பெற்றுச்செல்லுமாறு உரியவர்களிடம் கூறினார்கள்.

Next Story