வேலூர், அரக்கோணம் தொகுதிகளில் போட்டியிட புதிய நீதிக்கட்சி, பா.ம.க. வேட்பாளர்கள் மனு தாக்கல்
வேலூர் தொகுதி புதிய நீதிக்கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், அரக்கோணம் தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். வேலூரை குட்டி பெங்களூருவாக மாற்றுவேன் என்று ஏ.சி.சண்முகம் கூறினார்.
வேலூர்,
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுதாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். இவர் நேற்றுகூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
முன்னதாக அவர் வேலூர் பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணாசிலைக்கும், ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்தார். பின்னர் அண்ணாகலையரங்கம் அருகில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் உருவப்படங்களுக்கும் மாலை அணிவித்தார்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டார். ஊர்வலம் கோட்டை, மக்கான் சந்திப்பு, பழைய பஸ்நிலையம், ஆற்காடு ரோடு வழியாக சென்று கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது.
அங்கு வேலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராமனிடம், ஏ.சி.சண்முகம் வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய், பா.மக. மாநில துணைப்பொது செயலாளர் கே.எல்.இளவழகன், தே.மு.தி.க. மாவட்ட தலைவர் ஸ்ரீதர், புதிய நீதிக்கட்சி மாவட்ட தலைவர் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர். ஏ.சி.சண்முகத்துக்கு மாற்று வேட்பாளராக அவருடைய மனைவி லலிதாலட்சுமி சண்முகம் மனுதாக்கல் செய்தார்.
மனுதாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த ஏ.சி.சண்முகம் கூறியதாவது:-
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன். அவ்வாறு வெற்றிபெற்றால் வேலூரை ஒரு குட்டி பெங்களூருவாக மாற்றுவேன். 2 ஆண்டுகளில் வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை முடிப்பேன். வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்தனி அலுவலகம் அமைப்பேன். அடிப்படை தேவையான குடிநீர் பிரச்சினையை தீர்ப்பேன்.
என்னை வெற்றிபெறச்செய்தால் வேலூர் நாடாளுமன்ற தொகுதி மக்கள், பெங்களூருவில் உள்ள எனக்கு சொந்தமான மருத்துவமனையில் இலவச சகிச்சை பெற்றுக்கொள்ளலாம். வேலூர் தொகுதிக்கு தகவல் தொழில்நுட்ப பூங்காவைகொண்டுவந்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன். இந்த தொகுதி இளைஞர்கள் வெளிநாட்டில் வேலை செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஊர்வலத்தில் அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் எம்.மூர்த்தி, தகவல்தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனி சதீஷ்குமார், த.மா.கா. மாநகர தலைவர் மூர்த்தி, முன்னாள் மத்தியமந்திரி என்.டி.சண்முகம் உள்பட பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., த.மா.கா உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என திரளானவர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே வந்ததும் 100 மீட்டர் தூரத்திலேயே அவர்களை போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு செல்ல முயன்றனர். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தேசிய உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில், கட்சியின் மாநிலதுணைப்பொது செயலாளர் கரடிக்குடி கிராமத்தைசேர்ந்த அபிபுல்லா (வயது44), தேர்தல் நடத்தும் அலுவலர் ராமனிடம் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேலூர் மக்கான் பகுதியை சேர்ந்த நாசீர் (39), அலமேலு மங்காபுரத்தை சேர்ந்த உமாசங்கர் ஆகியோரும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்களாக நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதேபோன்று அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தீபனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அப்போது முன்னாள் மத்திய மந்திரி அரங்கவேலு, அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, பா.ம.க. துணைபொது செயலாளர் சரவணன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் தசரதன் ஆகியோர் உடனிருந்தனர்.
அரக்கோணம் சு.ரவி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் முகமதுஜான் மற்றும் பலர் உடன் வந்திருந்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியேவந்த ஏ.கே.மூர்த்தி கூறுகையில் மத்தியிலும், மாநிலத்திலும் நிலையான ஆட்சி அமையவேண்டும். அதற்காக டாக்டர் ராமதாஸ் 10 கட்டளைகளுடன் அ.தி.மு.க. தலைமையில் வெற்றி கூட்டணியை அமைத்து உள்ளார். அரக்கோணம் தொகுதியில் எங்குசென்றாலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுவந்து வரவேற்கிறார்கள்.
எனக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வலுவான கூட்டணி. இந்த கூட்டணி சார்பில் போட்டியிடும் என்னை ஜாதி, மதமின்றி பொது வேட்பாளராக பொதுமக்கள் பார்க்கிறார்கள். எனவே கண்டிப்பாக வெற்றிபெறுவேன். என்னை வெற்றிபெறச்செய்தால் தொகுதி மக்களுக்கு தொண்டனாக இருந்து பணியாற்றுவேன் என்றார்.
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் திருத்தணி ஜோதிநகரை சேர்ந்த டி.தாஸ், தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தீபனிடம் மனுதாக்கல் செய்தார்.
அதேபோன்று நாம் தமிழர் கட்சி சார்பில் அரக்கோணத்தை சேர்ந்த பாவேந்தன் (40) என்பவர், அரக்கோணம் தெகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தீபனிடம் மனுதாக்கல் செய்தார். வழக்கறிஞரான இவர் நாம் தமிழர் கட்சியின் அரக்கோணம் சட்டமன்ற தொகுதி பொருளாளராக உள்ளார். எம்.எஸ்.கிருஷ்ணன் என்பவர் சுயேச்சை வேட்பாளராக மனுதாக்கல் செய்தார்.
Related Tags :
Next Story