வாகன சோதனை, தேர்தல் பறக்கும் படையினரிடம் ரூ.4½ லட்சம் சிக்கியது


வாகன சோதனை, தேர்தல் பறக்கும் படையினரிடம் ரூ.4½ லட்சம் சிக்கியது
x
தினத்தந்தி 23 March 2019 5:00 AM IST (Updated: 23 March 2019 4:28 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.4½ லட்சம் சிக்கியது.

நெல்லை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்வதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, நெல்லை மாவட்டம் அம்பை வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் அடங்கிய பறக்கும் படையினர் நேற்று மதியம் சேரன்மாதேவி ஆற்றுப்பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி விசாரணை நடத்தினர்.

இதில், அந்த மினிலாரியில் வந்தது குமரி மாவட்டம் களியக்காவிளையை சேர்ந்த நேசமணி மகன் ரெஜின்குமார் என்பது தெரியவந்தது. அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்து 600 இருப்பது தெரியவந்தது. தான் வாழைக்காய் வியாபாரி எனவும், வாழைக்காய் வாங்குவதற்காக கேரளா செல்வதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் அவரிடம் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால், ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்து 600-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை, அம்பை தாலுகா அலுவலகத்தில் துணை தாசில்தார்கள் சத்தியவள்ளி, ஷீலாதேவி ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

தென்காசியில் இருந்து செங்கோட்டை செல்லும் சாலையில் நேற்று பறக்கும் படை அதிகாரியான சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் வெற்றிச்செல்வி, போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராம், ஏட்டு கருப்பசாமி, காவலர் சுடலைகுமார் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேரளாவில் இருந்து வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பாவூர்சத்திரத்தை அடுத்த குறும்பலாப்பேரி அம்மன் நகர் பகுதியை சேர்ந்த சிவனு பாண்டி மகன் அய்யப்பன் (வயது 27) என்பவர் இருந்தார்.

அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்து 780 இருந்தது. கேரளாவில் சென்று காய்கறிகளை விற்று வருவதாக அவர் கூறினார். ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நெல்லை சந்திப்பு பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை முருகன் தலைமையில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு கார் வேகமாக வந்தது. அந்த காரை நிறுத்த முயற்சி செய்தபோது, அந்த வழியாக சென்ற 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு கார் மீது உரசியவாறு வேகமாக சென்றது. இதையடுத்து பறக்கும் படையினர் அந்த காரை விரட்டிச்சென்றனர்.

தேவர் சிலை அருகில் போலீசார் உதவியுடன் அந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அந்த காரில் இருந்தவர் பாளையங்கோட்டை சாந்திநகரை சேர்ந்த எர்வர்டு குணசேகரன் என்பதும், அவரிடம் ரூ.92 ஆயிரம் இருப்பதும் தெரியவந்தது. அந்த பணத்தை வங்கியில் முதலீடு செய்வதற்காக கொண்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. ஆனால் அந்த பணத்துக்கு அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் ரூ.92 ஆயிரத்தை பறிமுதல் செய்து, கருவூலத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் நெல்லை சந்திப்பு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story