பெங்களூரு மத்தி தொகுதியில் நடிகர் பிரகாஷ் ராஜ், பி.சி.மோகன் எம்.பி. வேட்புமனு தாக்கல்


பெங்களூரு மத்தி தொகுதியில் நடிகர் பிரகாஷ் ராஜ், பி.சி.மோகன் எம்.பி. வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 23 March 2019 5:03 AM IST (Updated: 23 March 2019 5:03 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு மத்தி தொகுதியில் நடிகர் பிரகாஷ் ராஜ், பி.சி.மோகன் எம்.பி., நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் 2 கட்டங்களாக ஏப்ரல் 18, 23-ந் தேதிகளில் நடக்கிறது. பெங்களூரு உள்பட 14 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 18-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ், பெங்களூரு மத்தி தொகுதியில் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதன்படி அவர் நேற்று பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரி லேகேசிடம் பிரகாஷ்ராஜ் மனு தாக்கல் செய்தார்.

மனு தாக்கலுக்கு முன்பு, பிரகாஷ்ராஜ் தனது ஆதரவாளர்களுடன் சாந்திநகர் ஆஸ்டின் டவுனில் உள்ள நந்தா மைதானத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்தார். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விக்டோரியா லே-அவுட், ரிச்மண்டு சர்க்கிள், ராஜாராம் மோகன்ராய் ரோடு வழியாக மாநகராட்சி அலுவலகத்திற்கு பிரகாஷ்ராஜ் வந்தார்.

மனு தாக்கல் செய்தபோது, குடும்பத்தினர் உடன் இருந்தனர். முன்னதாக ஊர்வலம் புறப்பட்டபோது, பா.ஜனதாவினர் அங்கு கூடி மோடி, மோடி என்று கோஷங்களை எழுப்பினர். பதிலக்கு பிரகாஷ்ராஜ், காரில் இருந்து நின்றபடி அவர்களக்கு எதிராக பேசினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மனு தாக்கல் செய்த பிறகு பிரகாஷ்ராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எனக்கு ஆதரவாக திரைத்துறையினர் வந்து பிரசாரம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இது எனக்கும், வாக்காளர்களுக்கும் இடையே நடைபெறும் ஒரு உரையாடலை போன்றது ஆகும். நான் யாருக்கு எதிராகவும் போட்டியிடவில்லை.

காங்கிரஸ் கட்சியும் சாதி கட்சியாக உள்ளது. முஸ்லிம், தலித்துக்கு ஆதரவாக இருப்பதாக அக்கட்சியினர் சொல்கிறார்கள். பா.ஜனதாவினர், சாவு வீட்டிலும் மோடி, மோடி என்று கோஷம் போடுகிறார்கள். அதற்கு அர்த்தம் இல்லை. நான் வெற்றி பெற்றால், பா.ஜனதாவை ஆதரிக்க மாட்டேன்.

இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார்.

அதே போல் பெங்களூரு மத்தி தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட பி.சி.மோகன் எம்.பி., நேற்று மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அவருடன் முன்னாள் துணை முதல்-மந்திரி ஆர்.அசோக், முன்னாள் மந்திரிகள் அரவிந்த் லிம்பாவளி, சுரேஷ்குமார் உள்ளிட்டோர் இருந்தனர். மனு தாக்கலுக்கு முன்பு பி.சி.மோகன் கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக மாநகராட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.


Next Story