சுமலதா வேட்புமனு தாக்கலின்போது திரண்டவர்கள் மண்டியா மக்கள் அல்ல - மந்திரி டி.சி.தம்மண்ணா


சுமலதா வேட்புமனு தாக்கலின்போது திரண்டவர்கள் மண்டியா மக்கள் அல்ல - மந்திரி டி.சி.தம்மண்ணா
x
தினத்தந்தி 23 March 2019 5:12 AM IST (Updated: 23 March 2019 5:12 AM IST)
t-max-icont-min-icon

சுமலதா வேட்புமனு தாக்கல் செய்தபோது அங்கு திரண்டவர்கள் யாரும் மண்டியா மக்கள் இல்லை என்று மந்திரி டி.சி.தம்மண்ணா கூறினார்.

மண்டியா, 

கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தலை காங்கிரசும், ஜனதா தளம்(எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து சந்திக்கின்றன. இக்கூட்டணியில் மண்டியா நாடாளுமன்ற தொகுதி ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், முதல்-மந்திரி குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமி கவுடா போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து மறைந்த நடிகரும், முன்னாள் மத்திய-மாநில மந்திரியுமான அம்பரீசின் மனைவி சுமலதா அம்பரீஷ் போட்டியிடுகிறார். முன்னதாக சுமலதா அம்பரீஷ் மண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களம் இறங்க முயற்சித்தார். ஆனால் மண்டியா தொகுதி ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டதால் சுமலதாவுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. இருப்பினும் அவர் மண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட உள்ளார். இதற்காக அவர் கடந்த 20-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது மண்டியாவில் பிரமாண்ட கூட்டம் திரண்டது.

இந்த நிலையில் அந்த கூட்டத்தில் திரண்டவர்கள் யாரும் மண்டியா மக்கள் அல்ல என்றும், அவர்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள் என்றும் மந்திரி டி.சி.தம்மண்ணா தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுமலதா வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது அவருடன் ஊர்வலத்தில் திரண்டிருந்த மக்கள் மண்டியா மக்கள் இல்லை. அவர்கள் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மைசூரு, சென்னப்பட்டணா, ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டவர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story