விற்பனைக்கு வருகிறது, நியூயார்க்கின் ‘அடையாளம்’


விற்பனைக்கு வருகிறது, நியூயார்க்கின் ‘அடையாளம்’
x
தினத்தந்தி 23 March 2019 3:32 PM IST (Updated: 23 March 2019 3:32 PM IST)
t-max-icont-min-icon

உலகிலேயே உயரமான கட்டிடங்களில் ஒன்றும், நியூயார்க் நகர அடையாளங்களில் ஒன்றுமான கிறிஸ்லர் கட்டிடத்தை விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

நியூயார்க்கில் நெடிதுயர்ந்த கட்டிடங்கள் அமைந்திருக்கும் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள இக்கட்டிடம், சுமார் ஆயிரத்து 48 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படப் போவதாக பிரபல ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’ இதழ் தெரிவித்துள்ளது.

கம்பீரத்துக்கும், கட்டிட வடிவமைப்புக்கும் பெயர்பெற்ற கிறிஸ்லர் கட்டிடம், அதன் 90 சதவீத பங்கை வைத்திருக்கும் எமிராட்டி இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்துக்கு குறிப்பிடத்தக்க இழப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிறுவனம், கிறிஸ்லர் கட்டிடத்தின் பெரும்பகுதி பங்கை கடந்த 2008-ம் ஆண்டில் ரூ. 5 ஆயிரத்து 592 கோடிக்கு வாங்கியது.

இந்தக் கட்டிடத்தை கடந்த 1997-ம் ஆண்டு சுமார் ரூ. ஆயிரத்து 746 கோடிக்கு வாங்கியதாகக் கூறப்படும் டிஷ்மான் ஸ்பேயர் ரியல் எஸ்டேட் குழுமம், இதன் 10 சதவீத பங்கை தக்கவைத்திருக்கிறது.

கிறிஸ்லர் கட்டிடத்தின் உரிமையாளர்களுக்கு, அது அமைந்திருக்கும் நிலம் சொந்தமில்லை. எனவே அதற்கு ஆண்டு வாடகை செலுத்தி வருகிறார்கள். அது, ரூ. 54 கோடியில் இருந்து கடந்த ஆண்டு ரூ. 223 கோடியாக அதிகரித்திருக்கிறது. வருகிற 2028-ம் ஆண்டில் அது ரூ. 286 கோடியாக கூடும் என்றும் கூறப்படுகிறது.

இதுபோன்ற செலவுகள், கிறிஸ்லர் கட்டிடத்தில் இருந்து வரும் பெரும்பகுதி வருவாயை விழுங்கி விடுவதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கட்டிடத்தில் சுமார் 4 லட்சம் சதுர அடி பரப்பளவு காலியாக இருக்கிறது என்றும் வால் ஸ்டிரீட் இதழ் குறிப்பிடுகிறது.

ஆயிரத்து 46 அடி உயரம் கொண்ட கிறிஸ்லர் கட்டிடம் 1930-ம் ஆண்டில் திறப்புவிழா கண்டபோது, உலகிலேயே உயரமான கட்டிடம் என்ற பெருமைக்குச் சொந்தமாக இருந்தது.

ஆனால், வெறும் 11 மாதங்களுக்கே அப்பெருமை நீடித்தது. இக்கட்டிடம் அமைந்திருக்கும் அதே மன்ஹாட்டன் பகுதியில் எழுந்த எம்பயர் ஸ்டேட் பில்டிங், உயரத்தில் இதை பின்னுக்குத் தள்ளியது.

Next Story