இந்தியாவின் இளம் புகைப்பட கலைஞர்


இந்தியாவின் இளம் புகைப்பட கலைஞர்
x
தினத்தந்தி 23 March 2019 3:55 PM IST (Updated: 23 March 2019 3:55 PM IST)
t-max-icont-min-icon

அர்ஷ்தீப் சிங் இந்தியாவின் இளம் புகைப்பட கலைஞர் என்ற பட்டத்தை வென்றிருக்கிறார்.

பஞ்சாப்பை சேர்ந்த அர்ஷ்தீப் சிங்கிற்கு 10 வயதுதான் ஆகிறது. அதற்குள் இந்தியாவின் இளம் புகைப்பட கலைஞர் என்ற பட்டத்தை வென்றிருக்கிறார். இவரது கைவண்ணத்தில் ‘கிளிக்’ ஆன ஒரு புகைப்படம், கடந்த ஆண்டு லண்டனில் நடைபெற்ற உலக புகைப்பட கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. அந்த புகைப்படம்தான், அர்ஷ்தீப் சிங்கை, இந்தியாவின் இளம் புகைப்பட கலைஞராக மாற்றியிருக்கிறது. அதுபற்றி அர்ஷ்தீப் சொல்கிறார்.

‘‘என்னுடைய அப்பா பிரபல வனவிலங்கு புகைப்பட கலைஞர். அதனால் கேமராக்களோடு விளையாடும் அனுபவம் எனக்கு இயற்கையாகவே இருந்தது. குறிப்பாக என்னுடைய 5-வது பிறந்தநாள் பரிசாக, ஒரு புரபெஷ்னல் கேமராவை அப்பா பரிசளித்தார். ஆரம்பத்தில் என்ன செய்கிறோம் என்பதை உணராமலேயே புகைப்படங்கள் எடுத்து கொண்டிருந்தேன். பிறகு புகைப்பட கலையின் நுட்பம் புரிய ஆரம்பித்தது. ஷட்டர் ஸ்பீட் என்றால் என்ன?, அப்பர்சேர் எப்படி வெளிச்சத்தை கொடுக்கிறது, ஐ.எஸ்.ஓ.வின் பயன்பாடு என்ன? போன்ற விஷயங்களை புரிந்துகொண்டதால்... தொழில்முறை தரத்திலான புகைப்படங்களை எடுக்க முடிந்தது’’ என்றவர், வனவிலங்குகளை படம் பிடிக்க ஆரம்பித்ததை கூறுகிறார்.

‘‘குழந்தைகளுக்கு பொதுவாகவே விலங்குகளின் மீது ஆர்வம் அதிகம். மேலும் இயற்கை சம்பந்தமான புகைப்படங்கள் எனக்கு சலிப்பூட்டியதால், வனவிலங்குகளை புகைப்படமெடுக்க ஆரம்பித்தேன். அப்பாவின் ஆலோசனைகளும், பிரபல வனவிலங்கு புகைப்பட கலைஞர் டிம் லாமென் மற்றும் டேவிட் யாரோ ஆகியோரின் உத்வேகமும் சிறப்பான புகைப்படங்களுக்கு வழிகாட்டின.

வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பது அவ்வளவு சுலபமானது அல்ல. வனவிலங்குகளை தேடிப்பிடிக்க வேண்டும். பின்னர் விலங்குகளின் மனோபாவத்தை புரிந்துகொண்டு, நல்ல புகைப்படங்களுக்காக காத் திருக்கவேண்டும். அதுபோக தட்பவெப்ப நிலையையும், விலங்குகளின் உணவு விஷயங்களையும் புரிந்துகொண்டால் மட்டுமே, சிறப்பான புகைப்படங்களை எடுக்க முடியும். அதேசமயம் பொறுமையாகவும், விலங்குகளை அச்சுறுத்தாதபடியும் நடந்து கொள்ளவேண்டும். இந்த பட்டியலில் ஒன்றை தவற விட்டாலும், புகைப்படம் பறிபோய்விடும்’’ என்று முடிக்கும் அர்ஷ்தீப்பிற்கு ஒரு மனக்கவலையும் இருக்கிறது. அது என்ன தெரியுமா..? புகைப்பட துறையில் பல விஷயங்களை கற்றுக்கொடுக்கும் தந்தை, வீட்டுப்பாடம் எழுதிக் கொடுக்கும் விஷயத்தில் அலட்சியம் காட்டுகிறாராம்.

Next Story