வாலிபரை கொன்ற அண்ணன்– தம்பிக்கு ஆயுள் தண்டனை நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு


வாலிபரை கொன்ற அண்ணன்– தம்பிக்கு ஆயுள் தண்டனை நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 23 March 2019 10:15 PM GMT (Updated: 23 March 2019 2:44 PM GMT)

களியக்காவிளை அருகே வாலிபரை கொலை செய்த அண்ணன்–தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

நாகர்கோவில்,

களியக்காவிளை அருகே மேல்புறம் மடிச்சல் குளத்துவிளைவீட்டை சேர்ந்தவர் சிந்துமோன் (வயது 33), பாட்டு கச்சேரி நடத்தும் குழுவில் வேலை பார்த்து வந்தார்.

இவர் அந்த பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது சிந்துமோனுக்கும், அதே பகுதியில் வசித்து வரும் ஜெஸ்டின் (32) மற்றும் அவருடைய தம்பி ஆல்வின் (30) ஆகியோருக்கும் இடையே திருமண வீட்டு சாப்பாடு வி‌ஷயத்தில் தகராறு ஏற்பட்டது. மேலும் ஜெஸ்டினும், ஆல்வினும் சேர்ந்து சிந்துமோனிடம் கடுமையாக வாக்குவாதம் செய்துள்ளனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் 29–11–2009 அன்று சிந்துமோன் வட்டவிளை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஜெஸ்டினும், அவருடைய தம்பி ஆல்வினும் அங்கு வந்தனர். பின்னர் சிந்துமோனிடம் மீண்டும் பிரச்சினை செய்ததோடு திடீரென 2 பேரும் சேர்ந்து அவரை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதனை பார்த்த சுஜின் என்பவர், தடுக்க ஓடி வந்தார். ஆனால் அவரையும் ஜெஸ்டின் கத்தியால் குத்தி உள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த சிந்துமோன் பரிதாபமாக இறந்தார். சுஜின் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.  இந்த கொலை தொடர்பாக களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து அண்ணன்–தம்பியை கைது செய்தனர். இந்த வழக்கு நாகர்கோவிலில் உள்ள கூடுதல் அமர்வு விரைவு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி அப்துல்காதர் விசாரித்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அப்போது குற்றம் சாட்டப்பட்ட ஜெஸ்டின் மற்றும் ஆல்வின் ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அப்துல்காதர் தீர்ப்பு கூறினார். மேலும் சுஜினை கத்தியால் குத்தியதற்காக ஜெஸ்டினுக்கு கூடுதலாக 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை ஜெஸ்டின் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் அரசு குற்றவியல் வக்கீல் ஞானசேகர் ஆஜராகி வாதாடினார்.

Next Story